உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை அறிவிக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் எம்.பி. தலைமையில் தி.மு.க.வினர் திடீர் தர்ணா

உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை அறிவிக்க கோரி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் எம்.பி. தலைமையில் தி.மு.க.வினர் திடீரென தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-01-02 22:15 GMT
சேலம், 

சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களுக்கு கடந்த 27, 30-ந் தேதிகளில் தேர்தல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது. இந்தநிலையில் நேற்று மாலை தி.மு.க. எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் தலைமையில் சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா மற்றும் நிர்வாகிகள் பலர் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

அப்போது அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிக இடங்களில் தி.மு.க. முன்னிலையில் உள்ளது.

பல இடங்களில் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றும் இதுவரை அறிவிக்கப்படாமல் உள்ளனர். இதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து அவர்கள் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசனை சந்தித்து பேசினர்.

அப்போது அவரிடம், உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும் என்றும், வாக்கு எண்ணிக்கை நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை உடனடியாக அறிவிக்காததை கண்டித்து எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். எடப்பாடி நகர தி.மு.க. செயலாளர் பாஷா தலைமையில் அவைத்தலைவர் மாதையன், மாவட்ட பிரதிநிதிகள் ராமலிங்கம், சிங்காரவேலு, நிர்வாகிகள் அறிவழகன், ரமேஷ், சின்னதுரை உள்பட பலர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்