கோவில்பட்டி அருகே, கண்மாயில் தொழிலாளி பிணம் - போலீசார் விசாரணை

கோவில்பட்டி அருகே கண்மாயில் தொழிலாளி பிணமாக மிதந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-01-03 22:45 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டி அருகே முடுக்கலாங்குளம் கிராமத்துக்கு தென்புறம் உள்ள செவல்குளம் கண்மாயில் நேற்று மதியம் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக மிதந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, கொப்பம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அய்யப்பன், சப்-இன்ஸ்பெக்டர் குரு சந்திர வடிவேல் மற்றும் போலீசார் விரைந்து சென்று, கண்மாயில் பிணமாக மிதந்த வாலிபரின் உடலைக் கைப்பற்றி, பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கண்மாயில் பிணமாக மிதந்தவர், முடுக்கலாங்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான மாணிக்கம் மகன் அரிச்சந்திரன் (வயது 30) என்பது தெரிய வந்தது. இவருடைய மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கலைச்செல்வி, கணவரை விட்டு பிரிந்து, பெற்றோரின் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதையடுத்து அரிச்சந்திரன் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அரிச்சந்திரன் திரும்பி வராமல் மாயமானார். இந்த நிலையில் அவர் கண்மாயில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கண்மாயில் ஆழமான பகுதியில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்