தோற்று விடுவோம் என்று சென்றவரை வெற்றி தேடி வந்தது - முறைகேடு நடந்ததாக கூறி முற்றுகை

பள்ளப்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் தோற்று விடுவோம் என்று வீட்டுக்கு சென்றவரை வெற்றி தேடி வந்தது. வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக கூறி முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-01-03 22:30 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் பள்ளப்பட்டி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியின் தலைவர் பதவிக்கு பரமன், காளிதாஸ் உள்பட மொத்தம் 10 பேர் போட்டியிட்டனர். இந்த ஊராட்சியின் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம், திண்டுக்கல் வாக்கு எண்ணும் மையத்தில் நள்ளிரவு நடைபெற்றது. அப்போது காளிதாஸ் என்பவர் மற்ற 9 பேரை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார்.

இதனால் வாக்கு எண்ணிக்கை நிறைவுபெறும் முன்பே பரமன் உள்பட 9 பேரும் வீட்டுக்கு சென்று விட்டனர். இதற்கிடையே வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஆனது. ஆனால், காளிதாஸ் மற்றும் அவருடைய முகவர்கள் தங்களுக்கே வெற்றி என்று நினைத்து தேர்தல் முடிவு அறிவிப்புக்காக காத்திருந்தனர். இந்த நிலையில் அதிகாலையில் பரமன் வெற்றிபெற்றதாக தேர்தல் அதிகாரிகள் கூறினர்.

இது வெற்றி அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்த காளிதாஸ் தரப்பினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே தேர்தல் நடத்தும் அலுவலரின் அறைக்கு சென்று, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறினர். இதனால் அதிகாரிகளுக்கும், காளிதாஸ் தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் பற்றி அறிந்த காளிதாசின் ஆதரவாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர், வாக்கு எண்ணும் மையத்தை முற்றுகையிட்டனர். மேலும் நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். உடனே தேர்தல் அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மறுவாக்கு எண்ணிக்கை நடத்தும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து பள்ளப்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு பதிவான வாக்குகள் மறுஎண்ணிக்கை நடத்தப்பட்டது. காலை 11 மணி வரை வாக்கு எண்ணிக்கை நடந்தது. மொத்தம் 2 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இறுதியில் பரமன் 1,801 வாக்குகளும், காளிதாஸ் 1,751 வாக்குகளும் பெற்றனர். இதன்மூலம் பரமன் 50 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். இந்த சம்பவத்தால் திண்டுக்கல் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்