கடற்கரை காந்தி திடலில் அகில உலக யோகா திருவிழா நாராயணசாமி தொடங்கி வைத்தார்

புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் அகில உலக யோகா திருவிழா நேற்று தொடங்கியது. இதனை முதல்-அமைச்சர் நாராயணசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழா நாளை மறுநாள் (செவ்வாய்க் கிழமை) வரை நடக்கிறது.

Update: 2020-01-04 23:00 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை சார்பில் ஆண்டுதோறும் அகில உலக யோகா திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 26-வது அகில உலக யோக திருவிழா தொடக்க நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.

கடற்கரை காந்தி திடலில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து அகில உலக யோகா திருவிழாவை தொடங்கி வைத்தார். இதில் வெளிநாடு மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்று சிறப்பு யோகாசனம் செய்தனர். இதனை கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் கண்டுகளித்தனர். மேலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.

இலவச வகுப்பு

யோகா திருவிழாவையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கைவினை கிராமத்தில் இன்று (ஞாயிற்றுக் கிழமை), நாளை (திங்கட் கிழமை) காலை 7 மணி முதல் 8 மணி வரை இலவச யோகா வகுப்புகள் நடத்தப்படுகிறது.

அதேபோல் இன்று முதல் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) வரை மாலை 4 மணி முதல் 7 மணி வரை சித்தமருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஹோமியோபதி, தொற்றாநோய்கள் கண்டறிதல், நீரிழிவு நோயால் விழித்திரையில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிந்து ஆலோசனை வழங்க இலவச மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.

நிறைவு விழா

முன்னதாக சுற்றுலாத்துறை இயக்குனர் முகமது மன்சூர் வரவேற்றார். விழாவில் வைத்திலிங்கம் எம்.பி., ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., சுற்றுலாத்துறை செயலர் பூர்வா கர்க் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். யோகா திருவிழாவில் புதுச்சேரி மட்டுமின்றி வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பல்வேறு யோகாசனங்கள் செய்ய உள்ளனர். விழா நாளை மறுநாள் நிறைவுபெறுகிறது.

மேலும் செய்திகள்