மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி ஆதரவாளர்களுடன் கலெக்டர் முகாம் அலுவலகத்தை முற்றுகையிட்ட வேட்பாளர்

மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி நெய்குப்பை ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் தனது ஆதரவாளர்களுடன் வந்து பெரம்பலூர் கலெக்டர் முகாம் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-01-05 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நெய்குப்பை கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி, அந்தப்பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் விஜயலெட்சுமி தனது ஆதரவாளர்களுடன் நேற்று காலை, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், தொடர்ந்து அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது வேட்பாளர் விஜயலட்சுமி கூறுகையில், நான் நெய்குப்பை கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்டேன். ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தில் பொன்னுச்சாமி என்பவரின் முதல் மனைவி பச்சையம்மாள் போட்டியிட்டார். மேலும் பொன்னுச்சாமியின் 2-வது மனைவி மகாராணி வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் முக்கிய சேவகியாக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு வேண்டிய நபர்களை நெய்குப்பை கிராம ஊராட்சி வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமனம் செய்துள்ளார். மேலும் அவர்கள் வாக்குப்பதிவின் போது முதியோர்களை பச்சையம்மாள் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கூறி உள்ளார். எனக்கு வாக்களித்த வாக்குச்சீட்டுகளை மாற்றி மடித்தும் செல்லாத வாக்குகளாக மாற்றி விட்டனர்.

ஒரு கிராம் தங்க காசு தருவதாக பரிசு கூப்பன்

மேலும் வாக்கு எண்ணிக்கையின் போது நான் 3 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றதாக அறிவித்தனர். பின்னர் நான் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி விண்ணப்பித்தும், மகாராணியின் வற்புறுத்தலின் பேரில், தேர்தல் நடத்திய அதிகாரியான வட்டார வளர்ச்சி அதிகாரி மறு வாக்கு எண்ணிக்கை நடத்த நேரம் இல்லை என்ற கூறி விட்டார். மேலும் பச்சையம்மாள் வெற்றி பெற்றால் ஒரு கிராம் தங்க காசு தருவதாக ஆசை வார்த்தை கூறி வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கியுள்ளார். எனவே நெய்குப்பை கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு தேர்தலில் பதிவான வாக்குகளை மறுவாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவை வெளியிட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தர்ணா

மேலும் விஜயலட்சுமியுடன் வந்திருந்த ஆதரவாளர்கள், வாக்காளர்களுக்கு பச்சையம்மாள் வழங்கியதாக கூறப்பட்ட பரிசு கூப்பனை கையோடு எடுத்தி வந்திருந்தனர். இந்நிலையில் கலெக்டர் முகாம் அலுவலகத்திற்கு கலெக்டர் சாந்தா காரில் வந்து கொண்டிருந்த போது, அவரிடம் முறையீடு செய்ய முற்றுகை யில் ஈடுபட்டவர்கள் ஓடினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை கயிறு கட்டி தடுத்தனர். அதனை தொடர்ந்து விஜயலட்சுமி தனது ஆதரவாளர்களுடன் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் முன்பு சாலையில் சிறிது நேரம் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தர்ணாவில் ஈடுபட்டவர்கள் அதிகாரிகளிடம் இது தொடர்பான மனுவினை அளித்தனர். மனுவினை பெற்ற அதிகாரிகள் அதனை கலெக்டர் சாந்தாவிடம் அளித்தனர். இதையடுத்து தர்ணாவில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்