தேர்தல் தகராறில் வியாபாரியை கொல்ல முயற்சி - குடிசைக்கு தீ வைத்த வாலிபர் கைது

உள்ளாட்சி தேர்தல் தகராறில் குடிசைக்கு தீ வைத்து வியாபாரியை கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-01-05 22:30 GMT
பண்ருட்டி, 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பாப்பன்கொல்லை மேற்கு தெருவை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 28). இவர் சொரத்தங்குழியில் கட்டிடம் கட்ட தேவையான ‘ஹாலோபிளாக்’ விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். மேலும் ராஜதுரை, தான் தங்குவதற்காக கடை அருகே குடிசை ஒன்றையும் அமைத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை மூடிவிட்டு ராஜதுரை, குடிசையில் படுத்திருந்தார். அப்போது கடை அருகே மோட்டார் சைக்கிள் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. உடனே ராஜதுரை எழுந்து பார்த்தார். அப்போது 3 பேர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கினர். பின்னர் அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பெட்ரோலை குடிசை மீது ஊற்றி, அதற்கு தீ வைத்து எரித்தனர். பின்னர் அங்கிருந்து சென்று விட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜதுரை, குடிசையில் இருந்து அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தார். பின்னர் கடையில் இருந்த மணல் மற்றும் தண்ணீர் மூலம் தீயை அணைக்க முயன்றார். இருப்பினும் அவரால் முடியவில்லை. இதையடுத்து போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடுக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சக்திவேல் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு ஆதரவாக ராஜதுரை பிரசாரம் செய்து, தீவிர களப்பணியாற்றினார். இதனால் தேர்தல் தகராறு காரணமாக ராஜதுரையை கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சொரத்தங்குழியை சேர்ந்த ஜெயராமன்(30) என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்