மாநில அளவிலான கபடி போட்டி: தஞ்சை அணிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு

மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்கும் தஞ்சை மாவட்ட அணிக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு நடைபெற்றது. .

Update: 2020-01-05 22:45 GMT
தஞ்சாவூர்,

கரூர் மாவட்டம் புகலூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவில் சீனியர் ஆண்களுக்கான கபடி போட்டி வருகிற 17-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்க உள்ள தஞ்சை மாவட்ட ஆண்கள் அணிக்கு வீரர்கள் தேர்வு தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது.

வீரர்கள் தேர்வு செய்யும் பணியை தஞ்சை மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர் கிரு‌‌ஷ்ணசாமி வாண்டையார் தொடங்கி வைத்தார். நடுவர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் சித்தார்தன் தலைமையில் 10 நடுவர்கள் வீரர்களை தேர்வு செய்தனர். தேர்வில் கலந்து கொண்ட வீரர்கள் ஆதார் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் அசல் மற்றும் நகலை கொண்டு வந்தனர்.

12 பேர்

இவைகளை நடுவர்கள் குழுவினர் சரிபார்த்தனர். மேலும் 80 கிலோவிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பதால் வீரர்கள் எடை சரிபார்க்கப்பட்டது. மொத்தம் 130 பேர் கலந்து கொண்டனர்.

இவர்களை 7 பேர் கொண்ட அணியாக பிரித்து அவர்களுக்குள் விளையாட விட்டு, சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட ஆண்கள் அணிக்கு 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

வீராங்கனைகள்

இதேபோல் மாநில அளவிலான பெண்களுக்கான கபடி போட்டி அடுத்தமாதம்(பிப்ரவரி) நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதால் அந்த போட்டியில் பங்கேற்க உள்ள தஞ்சை மாவட்ட பெண்கள் அணிக்கும் வீராங்கனைகள் தேர்வு நடைபெற்றது. இதில் 30 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 17 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட வீரர், வீராங்கனை களுக்கு உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி அளிக்கப் படுகிறது.

தஞ்சை மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளரும், இந்திய கபடி அணியின் முன்னாள் பயிற்சியாளருமான பாஸ்கரன் கூறும்போது, உலக அளவில் அதிகமாக விரும்பி பார்க்கப்படும் விளையாட்டுகளில் கிரிக்கெட் முதலிடத்திலும், கபடி 2-வது இடத்திலும் உள்ளது. புரோ கபடி போட்டியை 1.2 பில்லியன்பேர் கண்டுகளித்துள்ளனர். இளைஞர்கள் அதிகம்பேர் கபடி விளையாட ஆர்வம் காட்டி வருகின்றனர். கபடி போட்டிக்காக தமிழகஅரசு நிதிஒதுக்கீடு செய்து வருகிறது.

சிறந்த வீரர், வீரங்கனைகளை உருவாக்குவதற்கு கிராமங்களில் விளையாட்டு மைதானத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மாவட்ட அளவில் உடற்பயிற்சி கூடத்துடன் கூடிய உள்விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும். இதற்காக கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்தால் இளைஞர்களை நல்வழிப்படுத்தி ஆரோக்கியமான இளைஞர்களை உருவாக்க முடியும் என்றார்.

மேலும் செய்திகள்