சேலத்தில் பட்டறை உரிமையாளரை தாக்கி பணம், வெள்ளிக்கட்டிகள் பறிப்பு - பிரபல ரவுடி கைது

சேலத்தில் பட்டறை உரிமையாளரை தாக்கி பணம், வெள்ளிக்கட்டிகளை பறித்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2020-01-05 22:30 GMT
சேலம், 

சேலம் இரும்பாலை அருகே உள்ள எம்.கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 51). வெள்ளிப்பட்டறை உரிமையாளர். இவர் சம்பவத்தன்று தலா ½ கிலோ எடை கொண்ட 2 வெள்ளிக்கட்டிகளை ஒரு பையில் போட்டு எடுத்துக்கொண்டு பூமிநாயக்கன்பட்டி அருகே சாலையில் நடந்து சென்றார்.

அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் ஜெயக்குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரை தடுத்து நிறுத்தினார். பின்னர் அவரிடம், மது வாங்க வேண்டும், எனவே பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்துக்கொடு, என்று கேட்டு உள்ளார். அதற்கு அவர் பணம் இல்லை என்று கூறியுள்ளார்.இதைத்தொடர்ந்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது அந்த வாலிபர் திடீரென்று ஜெயக்குமாரை தாக்கி அவரது பாக்கெட்டில் இருந்து ரூ.500 மற்றும் 1 கிலோ வெள்ளிக்கட்டிகளை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். இதனால் ஜெயக்குமார் கூச்சலிட்டார். இதைக்கேட்டதும் அருகில் இருந்த சிலர் சம்பவ இடத்திற்கு ஓடி வந்து அந்த வாலிபரை பிடித்து இரும்பாலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார். அப்போது அவர் சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ரகுநாதன் என்கிற சின்ன குரங்கன் (வயது 25) என்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர் ஜெயக்குமாரை தாக்கி பணம், வெள்ளிக்கட்டிகள் பறித்ததை ஒப்புக்கொண்டார். இதையொட்டி பிரபல ரவடி சின்னகுரங்கனை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்