‘வாட்ஸ்அப்’ குழு அமைத்து போதை பொருள் விற்ற கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

‘வாட்ஸ்-அப்’ குழு அமைத்து போதை பொருள் விற்ற கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-01-05 22:30 GMT
பூந்தமல்லி,

சென்னை வடபழனியில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின்பேரில், வடபழனி போலீசார் அந்த பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது வடபழனி 100 அடி சாலையில் சந்தேகப்படும்படியாக நின்ற ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் அவரிடம் சோதனை செய்தனர். அவரிடம் வெளிநாட்டு போதை பொருள் இருப்பது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின்பேரில், ராமாபுரத்தை சேர்ந்த விஷால்குமார்(வயது 22), வருண்குமார்(20), அரீஸ்(21) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் கைதான 3 பேரும் கல்லூரி மாணவர்கள் என்பதும், இவர்கள் நெதர்லாந்தில் இருந்து ஆன்-லைன் மூலம் போதை பொருட்களை வாங்கி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து ‘வாட்ஸ்-அப்’பில் ஒரு குழுவை உருவாக்கி, போதை பொருள் தேவை என்று சொல்லும் மாணவர்களுக்கு அதை வினியோகம் செய்து வந்ததும் தெரிந்தது.

ஒரு கிராம் போதை பொருள் ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை செய்து வந்தனர். கஞ்சாவை காட்டிலும் அதிக போதை தரும் என்பதால் இந்த போதை பொருளை கல்லூரி மாணவர்கள் விரும்பி, கூடுதல் விலை கொடுத்து வாங்கி சென்று உள்ளனர் என்பதும் விசாரணையில் தெரிந்தது.

கைதான 3 பேரிடம் இருந்தும் போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்களுக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்