சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் கருட தரிசனம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் கருட தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2020-01-05 22:30 GMT
சுசீந்திரம்,

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

கருட தரிசனம்

5-ம் திருவிழாவான நேற்று கருட தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவிலில் இருந்து ரிஷப வாகனத்தில் உமா மகேஸ்வரர், அன்ன வாகனத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மனும், கருட வாகனத்தில் பெருமாளும், உற்சவ மூர்த்திகளும் வெளியே வந்தனர்.

அப்போது, அவர்களுடன் வேளிமலை முருகனும், மருங்கூர் சுப்பிரமணிசாமியும், விநாயகரும் இணைந்து கோவிலை சுற்றி வலம் வந்தனர்.

அதைத்தொடர்ந்து வீரமார்த்தாண்ட கோவில் முன் மேற்கு நோக்கி உமா மகேஸ்வரர், பெருமாள், அறம் வளர்த்த நாயகி அம்மன் ஆகிய 3 பேரும் நின்றனர். அப்போது, அத்ரி முனிவரும் அனுசுயா தேவியாரும் வானத்தில் கருட வடிவில் வந்து தாணுமாலயசாமியை வணங்கினர். இந்த கருட தரிசன நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் கண்டு வணங்கினர்.

தேரோட்டம்

தொ டர்ந்து 9-ந் தேதி 7.45 மணிக்கு மேல் தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. இதில் சாமி தேர், அம்மன் தேர், விநாயகர் தேர் ஆகிய 3 தேர்கள் உலா வருகின்றன. அம்மன் ேதரை பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்து வருவார்கள்.

10-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில் நிர்வாகம், அறங்காவலர் குழுவினர், பக்தர்கள் இணைந்து செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்