மாநில தேர்தல் ஆணையர் நியமனம் செல்லாது என்று கவர்னர் பிறப்பித்த உத்தரவு சட்ட விரோதமானது - முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு

மாநில தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து கவர்னர் வெளியிட்ட உத்தரவு சட்ட விரோதமானது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Update: 2020-01-05 23:30 GMT
புதுச்சேரி, 

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி, தலைமை செயலாளர், உள்ளாட்சி துறை செயலாளர் மற்றும் இயக்குனருக்கு ஒரு ஆணை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநில தேர்தல் ஆணையராக பாலகிருஷ்ணனை நியமனம் செய்தது செல்லாது என்று கடந்த மாதம் (டிசம்பர்) 20-ந் தேதி கவர்னர் கிரண்பெடி ஒரு ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளார். மாநில தேர்தல் ஆணையர் நியமனம் என்பது ஒரு நிர்வாக நடவடிக்கையாகும். ஆனால் அவரை பணிநீக்கம் செய்வது என்பது சட்டப்படி சட்டமன்ற நடவடிக்கைக்கு உட்பட்டதாகும்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 243கே, 243எல், 243-இசட்.பி ஆகியவற்றில் வரையறுக்கப்பட்டதன் அடிப்படையில் புதுச்சேரி நகராட்சிகள் சட்டம் மற்றும் புதுச்சேரி கிராம மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகள் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரம் மாநில தேர்தல் ஆணையரிடம் இருக்கும். அவருடைய பணி மற்றும் பதவிக்காலம் குறித்து சட்டபேரவையில் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு உட்பட்டு நிர்வாகியால் வரையறுக்கப்படும். ஆனால் மாநில தேர்தல் ஆணையரை பணிநீக்கம் செய்வது என்பது ஐகோர்ட்டு நீதிபதியினை பணிநீக்கம் செய்யும் நடைமுறைகளின்படி செய்யப்பட வேண்டும் என்பது அந்த சட்ட திருத்தத்தில் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுவை மாநில அரசால் முறைப்படி நடப்பில் உள்ள விதிகளின் படி மாநில தேர்தல் ஆணையராக பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையரால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

18-12-2019 தேதியிட்ட மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில் மாநில தேர்தல் ஆணையத்தின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தோ அல்லது பாலகிருஷ்ணன் நீக்கம் செய்யப்பட்டார் என்றோ குறிப்பிடப்படவில்லை.

எனவே 20-12-2019 அன்று வெளியிடப்பட்ட கவர்னரின் உத்தரவு சட்ட விரோதமானது. அதனை பின்பற்றத்தேவையில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டம், புதுச்சேரி நகராட்சிகள் சட்டம், புதுச்சேரி கிராம மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகள் சட்டம் ஆகியவற்றின்படி தான் நடக்க வேண்டும்.

புதுவையில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படியே புதுவை அரசு உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்தும் பொருட்டு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தலை நடத்துவதற்கான முதல் கட்ட பணியை மாநில தேர்தல் ஆணையர் முடித்துள்ளார். இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து ஏதாவது நடவடிக்கை எடுத்தால் அது சட்ட விரோத நடவடிக்கையாக இருக்கும் என்பதோடு உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை தாமதப்படுத்தும் செயலாகும்.

புதுச்சேரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்து சட்டமன்றத்தில் இயற்றிய சட்டத்தின்படிதான் ஆட்சி நடக்க வேண்டும். எந்த ஒரு தனிநபரின் தன்னிச்சையான விருப்பத்திற்கு ஏற்றவாறு சட்டத்திற்கு புறம்பாக எதுவும் செய்ய முடியாது. செய்யவும் கூடாது.

உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று அரும்பாடுபடுவதாக கூக்குரல் இடுவோர் தற்போது உள்ளாட்சி தேர்தலை தடுக்கும் விதமாக ஆணையர் நியமனத்தில் சட்டத்திற்கு புறம்பாக செய்யச்சொல்லி அதிகாரிகளை மிரட்டுவது ஏன்? எனவும் அந்த உத்தரவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேற்கண்ட தகவல்களை அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ. ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்