சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி - டெல்லியை சேர்ந்தவர் கைது

சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டததாக டெல்லியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-01-06 22:15 GMT
ராமநாதபுரம்,

திருப்பாலைக்குடி அருகே உள்ளது கானாட்டங்குடி. இந்த ஊரை சேர்ந்தவர் செல்லையா என்பவரின் மகன் சுமோகரன் (வயது 22). மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ள இவரின் செல்போனிற்கு கடந்த அக்டோபர் மாதம், சென்னை விமான நிலையத்தில் பொறியாளர் பணிக்கு ஆட்கள் தேவை என்றும், விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் என்று செல்போன் எண் கொடுக்கப்பட்டிருந்தது.

இதைபார்த்த சுமோகரன் அந்த எண்ணில் தொடர்பு கொண்டார். மறுமுனையில் பேசிய வடமாநில நபர் சென்னை விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு வழங்குவதற்கான விண்ணப்ப தொகை ரூ.2 ஆயிரத்து 500 செலுத்தும்படி கூறியுள்ளார். இதையடுத்து அந்த தொகையை வடமாநில நபர் கூறிய வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார்.

அதன்பின்பு வேலை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வாக்கி டாக்கி, லேப்டாப், செல்போன், சீருடை போன்றவை வாங்க ரூ.51 ஆயிரமும், பணிநியமன ஆணை வழங்க ரூ.90 ஆயிரமும் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதை நம்பி சுமோகரன் வங்கி மூலம் அடுத்தடுத்து 2 கணக்குகளில் பணம் செலுத்தி உள்ளார்.

மொத்தம் ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 500 செலுத்திய நிலையில் சுமோகரன் வேலை குறித்து கேட்டபோது, வடமாநில நபர் விமான நிலைய வேலை ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும், பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது வங்கி கணக்கில் பணம் இல்லாததால், கணக்கில் குறைந்தபட்ச தொகை ரூ.50 ஆயிரம் இருந்தால் மட்டுமே வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க முடியும். எனவே ரூ.50 ஆயிரத்தை செலுத்தினால் அதனையும் சேர்த்து மொத்தமாக அனுப்பி விடுவதாக கூறியுள்ளார்.

இதில் சந்தேகமடைந்த சுமோகரன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாரிடம் புகார் செய்தார். அவரின் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரிட்டா வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

மேலும் இந்த நூதன மோசடி தொடர்பாக தனிப்பிரிவு போலீசார் தகவல் தொழில்நுட்ப உதவியுடன் விசாரணை மேற்கொண்டதில் டெல்லி சக்கிவாலா ஷாபத் டெய்ரி பகுதியை சேர்ந்த பால்முகுந்த் மகன் சுனித் (31) என்பதும், மற்றொரு நபர் புதுடெல்லி சகூர்பஸ்தி பகுதியை சேர்ந்த ஜக்கிதேரா மகன் சுராஜ் என்பதும் தெரியவந்தது.

இதில் சுனித் என்பவர் தான் மூளையாக செயல்பட்டு பணத்தை பெற்று வந்துள்ளார். அவரின் செல்போன் எண்ணை தனிப்பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தபோது சுனித் ராமேசுவரம் கோவிலுக்கு சாமி கும்பிட வருவதாக தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் ராமநாதபுரம் வந்த சுனித்தை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் இதுபோன்று பலரிடம் வேலை வாங்கி தருவதாக ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சுனித்தை ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் நீதிபதி ராதாகிருஷ்ணன் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த மோசடியில் தொடர்புடைய சுராஜ் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்