கூடலூர் அருகே பரபரப்பு: ஆதிவாசி மக்களுக்கு வினியோகித்த குடிநீரில் வி‌‌ஷம் கலப்பு - தொழிலாளி கைது

கூடலூர் அருகே ஆதிவாசி மக்களுக்கு வினியோகித்த குடிநீரில் வி‌‌ஷம் கலந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-01-07 22:15 GMT
கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட கர்க்கப்பாலி ஆதிவாசி கிராமத்தில் 18 குடும்பங்கள் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இப்பகுதி மக்களுக்கு பேரூராட்சி குழாய் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டது. இதனால் ஆதிவாசி மக்கள் தங்களது குடங்களில் குடிநீரை பிடித்து கொண்டிருந்தனர். அப்போது தண்ணீரில் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் தேவர்சோலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதை கேட்ட போலீசார் உ‌ஷார் அடைந்தனர். தொடர்ந்து நேரில் வந்து ஆய்வு செய்யும் வரை குடிநீரை யாரும் பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்தனர். மேலும் பேரூராட்சி நிர்வாகத்துக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

இதனைதொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் விஜயசண்முகநாதன், தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாபு, தலைமை காவலர் குமரன், காவலர் பிரபாகரன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பேரூராட்சி நிர்வாக அலுவலர்களும் அப்பகுதிக்கு வந்தனர். அப்போது ஆதிவாசி மக்களுக்கு வினியோகிக்கப்பட்ட குடிநீரை பரிசோதித்தனர். அதில் திம்மட் என்ற வி‌‌ஷம் கலந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார், பேரூராட்சி அலுவலர்கள் குடிநீர் குழாய்களை பரிசோதித்தனர். அப்போது குழாயை கழட்டி உள்ளே திம்மட் என்ற வி‌‌ஷத்தை அடைத்து விட்டு குழாயை மீண்டும் பொருத்தி இருப்பது தெரிய வந்தது. இதனால் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கோடு சதி செயல் நடைபெற்று உள்ளது தெரிய வந்தது. இது தொடர்பாக ஆதிவாசி மக்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அதே கிராமத்தை சேர்ந்த குஞ்சன் மகன் ராஜன் (வயது 46) என்பவர் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்தது தெரிய வந்தது. இதை கிராம மக்கள் தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ராஜனை தேடினர். அப்போது அவர் தலைமறைவானது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ராஜனை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். மேலும் ஆதிவாசி கிராமத்துக்கு செல்லும் குடிநீர் குழாய்களை பேரூராட்சி ஊழியர்கள் அகற்றினர். இந்த நிலையில் தேவர்சோலை அருகே 3 டிவி‌‌ஷன் பகுதியில் பதுங்கி இருந்த தொழிலாளி ராஜனை போலீசார் நேற்று பிடித்து விசாரித்தனர். விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக ஆதிவாசி மக்களுக்கு வழங்கும் குடிநீர் குழாயை கழட்டி திம்மட் வி‌‌ஷத்தை கலந்தது தெரிய வந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்