மதுரை கலெக்டர் அலுவலக டிரான்ஸ்பார்மரில் ஏறி மின்கம்பியை பிடித்த ராணுவ வீரர்

மனைவி தற்கொலை செய்ததால் மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ராணுவ வீரர் டிரான்ஸ்பார்மரில் ஏறி மின்கம்பியை பிடித்து தற்கொலைக்கு முயன்றார். தூக்கி வீசப்பட்ட அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2020-01-07 22:15 GMT
மதுரை,

மதுரை மாவட்டம் மேலஉரப்பனூரை சேர்ந்தவர், சக்தி (வயது 28). இமாசல பிரதேசத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள சித்தர்கள் நத்தம் பகுதியை சேர்ந்த தேனிஷா(19) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் சக்தி ராணுவ வேலைக்கு சென்றுவிட்டார்.

இந்தநிலையில், தேனிஷாவுக்கும், அவருடைய மாமனார்-மாமியாருக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் வருத்தம் அடைந்த தேனிஷா, கோபித்து கொண்டு நிலக்கோட்டையில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கு தேனிஷா நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனிஷா, மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சக்தி, சொந்த ஊருக்கு திரும்பினார்.

இதற்கிடையே மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சையில் இருந்த தேனிஷா நேற்று காலை பரிதாபமாக இறந்துபோனார். இதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது உடலை வாங்குவதற்காக கணவர் சக்தி உள்ளிட்ட உறவினர்கள் பிணவறை முன்பு காத்திருந்தனர்.

இதற்கிடையே, திருமணம் முடிந்து 4 மாதங்களே ஆகி இருந்ததால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடத்தப்பட்டது. இதற்காக, தேனிஷாவின் கணவர் சக்தி மற்றும் குடும்பத்தினர், மதுரை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு நேற்று மதியம் வந்தனர். அங்கு விசாரணை நடைபெற்று கொண்டிருந்தது.

மனைவி தற்கொலையால் சோகத்தில் இருந்த சக்தி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரை நோக்கிச் சென்றார். பின்னர் அவர் திடுதிப்பென டிரான்ஸ்பார்மரில் ஏறினார்.

இந்த விபரீதத்தை அறிந்து உறவினர்கள் அங்கு விரைந்து சென்றனர். கீழே இறங்கும்படி அலறினர். டிரான்பார்மரில் மின் இணைப்பு துண்டிக்கப்படவில்லை.

டிரான்ஸ்பார்மரில் நின்றபடி சிறிது நேரம் அழுது புலம்பிய சக்தி, யார் பேச்சையும் கேட்காமல், அங்கிருந்த மின்கம்பியை பிடித்துவிட்டார். அடுத்த நொடியே கரும்புகையுடன் தூக்கி வீசப்பட்டு கீழே வந்து விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவர், உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.

அந்த நேரத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செஞ்சிலுவை சங்கத்தினர், காயம் அடைந்தவர்களுக்கு முதல் உதவி அளிப்பது குறித்து பயிற்சி அளித்துக் கொண்டிருந்தனர். தகவல் அறிந்து அவர்கள் அங்கு ஓடிவந்தனர். சக்திக்கு முதல் உதவி அளித்தனர்.

பின்னர் அவர் உடனடியாக அருகில் உள்ள மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தல்லாகுளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மனைவி இறந்த சோகத்தில் ராணுவ வீரர், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி மின் கம்பியை பிடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்