வேலூரில் வாடகை செலுத்தாத 7 கடைகளுக்கு ‘சீல்’ - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

வேலூரில் வாடகை செலுத்தாத 7 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி‘சீல்’வைத்தனர்.

Update: 2020-01-08 22:15 GMT
வேலூர்,

வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை பாக்கியை உடனடியாக வசூலிக்கவும், வாடகை பாக்கியை செலுத்தாத கடைகளுக்கு 'சீல்' வைக்கப்படும் என்று நோட்டீஸ் வழங்கவும் மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி உடனடியாக பணம் செலுத்தும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் 2-வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன் தலைமையில் வருவாய் அலுவலர் ரவிக்குமார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று வேலூர் நேதாஜி மார்க்பெட் எப் பிரிவில் உள்ள 110 கடைகளில் வாடகை வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள 4 கடைகள் ஓராண்டுகளாக வாடகை செலுத்தாததும், ரூ.3 லட்சம் வாடகை பாக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அந்த 4 கடைகளையும் பூட்டி‘சீல்’ வைத்தனர். மேலும் அங்குள்ள மற்ற கடைகளில் வாடகை பாக்கி ரூ.6½ லட்சம் வசூல் செய்யப்பட்டது.

இதேபோன்று சத்துவாச்சாரி ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் உள்ள 16 கடைகளில் 2-வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன் தலைமையில் வருவாய் அலுவலர் குமரவேல் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் வாடகை வசூல் செய்தனர்.

அப்போது 3 கடைகள் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் வாடகை பாக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த 3 கடைகளுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது. அங்குள்ள மற்ற கடைகளில் வாடகை பாக்கி ரூ.1,72,000் வசூல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்