பவானி அருகே, லாரி மோதி கணவர் கண்முன் பேராசிரியை சாவு - திருமணம் ஆன ஒரு மாதத்தில் பரிதாபம்

பவானி அருகே திருமணம் ஆன ஒரு மாதத்தில் லாாி மோதி கணவர் கண் முன்னே பேராசிரியை இறந்தார்.

Update: 2020-01-10 23:15 GMT
பவானி, 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கே.ஒ.என். தியேட்டர் வீதியை சேர்ந்தவர் மெய்யரசு (வயது 32). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி சங்கீதா (28). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பார்மசி பயிற்சி கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.

மெய்யரசுவும், சங்கீதாவும் நேற்று மோட்டார்சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். காலை 9 மணி அளவில் பவானியை அடுத்த சித்தோடு ஐ.ஆர்.டி.டி. என்ஜினீயரிங் கல்லூரி அருகே சென்றபோது பின்னால் கோழிகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் 2 பேரும் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் சங்கீதா மூளை சிதறி தலை நசுங்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே கணவர் கண் முன்னே பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்ததும் டிரைவர் லாரியை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சித்ேதாடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயம் அடைந்த மெய்யரசு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்