திருப்பூர் மாநகரில் கடந்த ஆண்டில் குண்டர் சட்டத்தில் 21 பேர் கைது

திருப்பூர் மாநகரில் கடந்த ஆண்டில் குண்டர் சட்டத்தில் 21 பேர் கைது செய்யப்பட்டனர். முந்தைய ஆண்டை விட திருட்டு வழக்குகள் குறைந்துள்ளதாக போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் தெரிவித்தார்.

Update: 2020-01-10 23:19 GMT
திருப்பூர், 

திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருப்பூர் மாநகரில் கடந்த ஆண்டு சட்டம், ஒழுங்கு மிகவும் சிறப்பான முறையில் கையாளப்பட்டது. குறிப்பாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், ராமஜென்ம பூமி தீர்ப்பு, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் அமைதியான முறையில் கையாளப்பட்டது.

கடந்த ஆண்டு 277 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 252 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.1 கோடியே 51 லட்சத்து 84 ஆயிரத்து 870 மதிப்புள்ள திருட்டு போன சொத்துகள் மீட்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 27 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 26 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வடக்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்று கொடுக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டை விட கடந்த ஆண்டு திருட்டு வழக்குகள் 17 சதவீதம் குறைந்துள்ளது.

கஞ்சாவை ஒழிக்க தனிக்கவனம் செலுத்தப்பட்டது. இதனால் 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 113 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 118 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா வழக்கில் 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தொடர்பாக 283 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 300 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 61 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக 488 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 496 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 ஆயிரத்து 322 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2018-ம் ஆண்டை விட கடந்த ஆண்டு 9 சதவீதம் குறைந்துள்ளது. மாநகரில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், நகரில் அமைதியை ஏற்படுத்தவும் கடந்த ஆண்டு ரவுடிகள் மற்றும் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட 21 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாநகரில் கடந்த ஆண்டு அதிகபட்சமாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு 98 சாலை விபத்துகள் நடந்துள்ளன. 2018-ம் ஆண்டை ஒப்பிடும்போது 10 சதவீதம் விபத்து குறைந்துள்ளது. விபத்தை குறைக்க மாநகரில் 43 இடங்களில் சாலையை கடக்கும் பாதை, 123 இடங்களில் எச்சரிக்கை பலகை, வேகத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 2 லட்சத்து 21 ஆயிரத்து 172 சாலைவிதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.3 கோடியே 4 லட்சத்து 34 ஆயிரம் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகரில், புதிதாக குடியேறும் மக்கள் பற்றிய விவரங்களை சேகரிக்கும் நடைமுறை ஏற்படுத்தப்பட உள்ளது. தொழில் வழங்குவோர், வாடகைக்கு குடியிருப்போர் பற்றிய தகவல்கள் இந்த அமைப்பின் மூலம் சேகரிக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு முதல் காலாண்டில் தகவல்களை அதிகம் சேகரிக்க உள்ளோம். இன்னும் 15 நாட்களில் அதற்கான பணிகள் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் பத்ரி நாராயணன், பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர். 

பொதுமக்கள்-போலீஸ் வாட்ஸ்-அப் குழு

திருப்பூர் மாநகரில் சிறப்பு காவல் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு நகர் முழுவதும் 24 மணி நேரமும் 88 போலீசார் பணியாற்றி வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் 200 பேரின் செல்போன் எண்களை பதிவிட்டு ஒரு வாட்ஸ்-அப் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல் 22 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2 மாதங்களில் இந்த குழு மூலமாக பல முக்கிய தகவல்கள் போலீசாருக்கு கிடைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. போலீசுக்கும், பொதுமக்களுக்கும் நல்லுறவை ஏற்படுத்தும் வகையிலும் இது அமைந்துள்ளது. காவலன் செயலியை 5 ஆயிரத்து 889 பேர் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். இதுகுறித்து பெண்கள், மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் தெரிவித்தார். 

போலீஸ் அலுவலகத்துக்கு இடம் தேர்வு

திருப்பூர் மாநகரில் காவல் நிர்வாகத்தை மேம்படுத்தவும், கட்டமைப்புவசதியை ஏற்படுத்தவும் திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம், இதர போலீஸ் அலுவலகங்கள் அமைக்க இடம் தேர்வு பணிகள் நடந்து வருகிறது. அதன்படி 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆண்டிப்பாளையத்தில் போலீஸ் அதிகாரிகள் குடியிருப்பும், கரைப்புதூரில் ஆயுதப்படை மைதானமும், மண்ணரை கருமாரம்பாளையத்தில் மாநகர போலீஸ் அலுவலகமும் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு உயர் அதிகாரிகளின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையம் அமைக்க ராக்கியாபாளையத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது என்று போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்