கலசபாக்கம் ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் தி.மு.க. வெற்றி - முறைகேடு நடந்ததாக அ.தி.மு.க.வினர் சாலை மறியல்

கலசபாக்கம் ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. இதில் முறைகேடு நடந்ததாக கூறி அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2020-01-11 22:30 GMT
கலசபாக்கம், 

கலசபாக்கம் ஒன்றியத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் 21 கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க. சார்பில் 9 ஒன்றிய குழு உறுப்பினர்கள், அ.தி.மு.க. சார்பில் 8 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், பா.ம.க. சார்பில் 2 பேரும், சுயேச்சையாக 2 பேரும் வெற்றி பெற்றிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியக்குழு அலுவலக வளாகத்தில் ஒன்றியக்குழு தலைவருக்கான மறைமுக தேர்தல் காலை 11 மணிக்கு தொடங்கியது. இதில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. மற்றும் சுயேச்சைகள் உள்பட 21 பேர் கலந்துகொண்டனர். தேர்தலை கலசபாக்கம் தேர்தல் நடத்தும் அலுவலர் குமார் மற்றும் மரியதேவ்ஆனந்த் ஆகியோர் நடத்தினர்.

தேர்தலின் முடிவில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அன்பரசி ராஜசேகர் 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாகவும், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட குமாரி திருநாவுக்கரசு 9 வாக்குகளை பெற்றதாகவும் தேர்தல் அலுவலர்கள் அறிவித்தனர்.

அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் நாங்கள் 11 பேர் இருக்கும் நிலையில் தி.மு.க. கவுன்சிலர் எப்படி 12 வாக்குகள் பெற்றார், இதனால் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது எனக்கூறி வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி செல்லும் சாலையில் கலசபாக்கம் பஸ் நிறுத்தம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்