ஆன்-லைனில் விளம்பரத்தை பார்த்து காரை வாடகைக்கு எடுத்து மோசடி - 2 பேருக்கு வலைவீச்சு

ஆன்-லைனில் விளம்பரத்தை பார்த்து, காரை வாடகைக்கு எடுத்து மோசடி செய்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2020-01-11 22:30 GMT
ஆவடி,

ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை சபி நகரைச் சேர்ந்தவர் முத்துராணி(வயது 26). இவர், அதே பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தன்னிடம் உள்ள கார் வாடகைக்கு விடப்படும் என்று ஆன்-லைனில் விளம்பரம் செய்து இருந்தார்.

அதை பார்த்த சென்னையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் முத்துராணியை நேரில் தொடர்புகொண்டு மாத வாடகையாக ரூ.1,500 தருவதாக கூறி அவரது காரை வாடகைக்கு எடுத்துச்சென்றார். ஆனால் அதன்பிறகு அவர், சொன்னபடி காருக்கான வாடகை பணத்தை தராமல் காலம் கடத்தி வந்தார். தனது காரையாவது திருப்பி ஒப்படைக்கும்படி முத்துராணி கேட்டார்.

ஆனால் மணிகண்டன், வாடகையும் தராமல், காரையும் ஒப்படைக்காமல் இழுத்தடித்ததுடன், முத்துராணியின் காரை ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமதுஅலி என்பவரிடம் ரூ.1½ லட்சத்துக்கு அடமானம் வைத்து விட்டது தெரிந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துராணி, இந்த மோசடி குறித்து முத்தாபுதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டன் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது நண்பரான பொன்னேரியைச்சேர்ந்த கிருபாகரன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

அதேபோல் அம்பத்தூர் தொழிற்பேட்டை 3-வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாலு (54). தனியார் நிறுவன மேலாளரான இவர், 2018-ம் ஆண்டு தனது நண்பர் மூலம் அறிமுகமான மாங்காடு சக்ரா நகரைச்சேர்ந்த ரஞ்சித்கண்ணா(40) என்பவரிடம் தனக்கு சொந்தமான காரை ஒப்படைத்து, விற்பனை செய்து தருமாறு கூறினார்.

ஆனால் ரஞ்சித்கண்ணா, காரை விற்று தரவோ, காரை திரும்ப ஒப்படைக்கவோ செய்யாமல் பாலுவை ஏமாற்றி வந்தார். இது குறித்த புகாரின்பேரில் அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் நடத்திய விசாரணையில், ரஞ்சித்கண்ணா அந்த காரை வேறொருவருக்கு ரூ.3 லட்சத்து 20 ஆயிரத்துக்கு விற்றதும், ஆனால் அந்த பணத்தை பாலுவுக்கு கொடுக்காமல் ஏமாற்றி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து ரஞ்சித்கண்ணாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்