காங்கிரசை சீரழித்து விட்டனர்: அமைச்சர்களின் ஊழல் பட்டியலை கட்சி மேலிடத்திடம் கொடுப்பேன் - தனவேலு எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி

அமைச்சர்களின் ஊழல் பட்டியலை ஆதாரத்துடன் கட்சி மேலிடத்திடம் கொடுப்பேன் என்று தனவேலு எம்.எல்.ஏ. கூறினார். புதுவை சட்டசபை அலுவலகத்தில் பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான தனவேலு நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

Update: 2020-01-11 23:15 GMT
புதுச்சேரி, 

பாகூர் அரசு மருத்துவமனையின் அவலநிலையை கண்டித்து பொதுமக்களுடன் போராட்டம் நடத்தினேன். கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நான் இந்த ஆட்சிக்கு ஆதரவாக உள்ளேன். அப்படியிருக்க இப்போது நான் வெளிப்படையாக பேசுவதற்கு காரணம் எனக்கு பல அச்சுறுத்தல்கள் உள்ளன.

இந்த ஆட்சியில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் ஊழலில் ஈடுபடுகிறார்கள். அரசு ஆஸ்பத்திரிகளில் உயிர் காக்கும் மருந்துகள் இல்லை. கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் ரத்த பரிசோதனைக்கு கூட வெளியில் இருந்துதான் (தனியார்) வந்து ரத்தத்தை பெற்று செல்கிறார்கள். மிகவும் கேவலமான நிலை புதுச்சேரியில் நிலவுகிறது.

இனிமேல் நிறைய போராட்டங்கள் வரும். இப்போது மிக மோசமான ஆட்சி நடக்கிறது. என்னைப்பற்றி கட்சி மேலிடத்தில் புகார் தெரிவித்துள்ளதாக முதல்-அமைச்சர் கூறியுள்ளார். அமைச்சர்களின் ஊழல் பட்டியல் என்னிடம் ஆதாரத்துடன் உள்ளது. அதை நான் கட்சி மேலிடத்தில் நேரடியாக சென்று கொடுக்க உள்ளேன்.

மூத்த தலைவர்கள் பலர் லஞ்ச ஊழல் செய்து காங்கிரசை சீரழித்துவிட்டனர். முதல்-அமைச்சராக நாராயணசாமி பதவியை தொடர்ந்தால் புதுவையில் காங்கிரஸ் வீழ்ச்சியை சந்திக்கும். என் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானது.

இப்போது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் நில மோசடிகள் நடந்து வருகிறது. நான் ஏதோ சி.பி.ஐ. அதிகாரிபோல் பலர் என்னிடம் இதுதொடர்பாக புகார்கள் அளிக்கின்றனர். தனியார் ஜவுளிக்கடை ஒன்றை திறப்பதற்கும் அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே பணம் கைமாறி உள்ளது. அதிகாரிகளை மிரட்டி பணிய வைக்கிறார்கள்.

நான் எதற்காகவும் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யமாட்டேன். ஏனென்றால் எம்.எல்.ஏ.வாக இருந்தால்தான் மக்களுக்கு ஏதாவது செய்ய முடியும். படிப்பறிவு இல்லாத அமைச்சரிடம் சில துறைகளை கொடுத்ததால் அரசு சார்பு நிறுவனங்கள் பல மூடப்பட்டுள்ளது. பல பெட்ரோல் பங்குகள் அமைச்சர்களுக்கு சென்றுள்ளது.

புதுவை அமைச்சர்கள் குறித்து காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய் தத்திடம் புகார் கூறி பயனில்லை. எனது தொகுதியில் பலர் முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு விண்ணப்பித்தபோதிலும் இதுவரை ஒருவருக்குக்கூட நிவாரண நிதி வழங்கப்படவில்லை.

புதுவையில் கேசினோ வந்தால் சீரழிவு ஏற்படும். விபசாரம் பெருகும். கேசினோ கொண்டுவருவது பயங்கரவாதத்தை கொண்டுவருவதற்கு சமம். எனவே இதுபோன்றவற்றை முழுசக்தியோடு எதிர்த்து போராடுவேன். எனக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏ.க்கள் என்னிடம் பேசி உள்ளனர்.

இவ்வாறு தனவேலு எம்.எல்.ஏ. கூறினார்.

மேலும் செய்திகள்