தற்போதைய சூப்பிரண்டு, சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கை கவனிப்பதால் குமரி மாவட்டத்துக்கு புதிய போலீஸ் சூப்பிரண்டு நியமனம்

குமரி மாவட்ட தற்போதைய போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கை கவனிப்பதால் புதிய போலீஸ் சூப்பிரண்டாக ராஜராஜன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2020-01-11 22:45 GMT
நாகர்கோவில்,

களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8-ந் தேதி இரவு பணியில் இருந்த போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டியும் படுகொலை செய்தனர். இச்சம்பவம் தமிழகம் மட்டும் அல்லாது கேரளாவிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பயங்கரவாதிகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீசுக்கே இந்த கொடூர நிலை ஏற்பட்டது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே தப்பிச் சென்ற பயங்கரவாதிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். பயங்கரவாதிகள் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு தமிழகம் மற்றும் கேரள அரசு சார்பில் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பயங்கரவாதிகளை பிடிக்க வேண்டிய கட்டாயம் மற்றும் நெருக்கடி ஏற்பட்டு இருப்பதால் இந்த விஷயத்தில் போலீஸ் உயர் அதிகாரிகளும் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்கள்.

தனிப்படை

இதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்துக்கு பயங்கரவாதிகளை பிடிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டு இருப்பதால் குமரி மாவட்டத்தில் சட்ட ஒழுங்கை பேண கூடுதலாக ஒரு போலீஸ் சூப்பிரண்டு நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். அதாவது மதுரை மாவட்டம் காவல் துறை அமலாக்கப்பிரிவில் பணியாற்றி வந்த போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் குமரி மாவட்டத்துக்கு புதிய போலீஸ் சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை டி.ஜி.பி. திரிபாதி நேற்று பிறப்பித்தார்.

இந்த நிலையில் புதிய போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் நேற்று குமரி மாவட்டம் வந்து உதவி சூப்பிரண்டுகள் மற்றும் துணை சூப்பிரண்டுகளிடம் ஆலோசனை நடத்தினார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் பொறுப்புகளை கவனிப்பார் என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் செய்திகள்