சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு: நெல்லையில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை

சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு தொடர்பாக நெல்லையில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-01-12 22:45 GMT
நெல்லை, 

குமரி மாவட்டம் களியக்காவிளையில் கடந்த 8-ந்தேதி இரவு வாகன சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை 2 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். பின்னர் அவர்கள் காரில் தப்பி சென்றனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையொட்டி அனைத்து மாவட்ட போலீசாரும் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். குமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த அப்துல் சமீம் (வயது 32), கோட்டார் இளங்கடை பகுதியை சேர்ந்த தவுபிக் (28) ஆகியோர் இந்த கொலையில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்களுடைய கூட்டாளிகளை பிடித்து போலீசார் விசாரணை செய்ய முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் தேசிய புலனாய்வு பிரிவு போலீசார், கியூ பிரிவு போலீசார்மற்றும் தனிப் படை போலீசார் நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த ஒரு வாலிபர், தென்காசியை சேர்ந்த ஒரு வாலிபர் மற்றும் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் ஒரு வாலிபர் என 3 பேரை பிடித்தனர். இந்த 3 பேரையும் நெல்லையில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு மேற்பார்வையில் நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்