மாமல்லபுரத்திற்கு சீன நாட்டு குழுவினர் வருகை - கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்களை கண்டு களித்தனர்

மாமல்லபுரத்திற்கு 100 பேர் கொண்ட சீன நாட்டு குழுவினர் நேற்று வருகைதந்து, கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்களை கண்டு களித்தனர்.

Update: 2020-01-12 22:30 GMT
மாமல்லபுரம், 

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி ஆகிய இரு நாட்டு தலைவர்களில் வருகைக்கு பிறகு சீன நாட்டு பயணிகள் உள்ளிட்ட சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில் பல்வேறு இடங்களில் இருந்து மாமல்லபுரம் நகரின் வரலாற்று பெருமைகளை தெரிந்து கொள்ள பள்ளி மாணவர்கள் உள்பட சுற்றுலா பயணிகளும் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் சீனாவின் தலைநகர் பீஜிங் மற்றும் ‌ஷாங்காய் ஆகிய இரு நகரங்களை சேர்ந்த மருத்துவர்கள், பொறியாளர்கள், கம்ப்யூட்டர் நிபுணர்கள், வழக்கறிஞர்கள், கல்லூரி பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் கொண்ட 100 பேர் கொண்ட குழுவினர் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர்.

அவர்கள் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றிபார்த்து புகைப்படம் எடுத்து கொண்டனர். குறிப்பாக மாமல்லபுரம் நகரின் முக்கிய புராதன சின்னமும், இயற்கை பேரிடர் காலங்களில் கூட சிறிதும் நகராத, பாறையின் நுணியில் நின்று காட்சி அளிக்கும் வெண்ணை உருண்டை பாறை அருகில் ஒரு குழுவாக அமர்ந்து சீனர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அவர்களுக்கு மாமல்லபுரம் நகரின் வரலாற்று பெருமைகளை சுற்றுலா வழிகாட்டிகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து விளக்கி கூறினர். முன்னதாக சீனநாட்டினரை மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

மேலும் செய்திகள்