குடகனாறு பிரச்சினையில் கலெக்டர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் - கிராம மக்கள் மனு

குடகனாறு பிரச்சினையில் கலெக்டர் நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.

Update: 2020-01-13 22:15 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமை தாங்கினார். கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். அதைத்தொடர்ந்து கடந்த முறை நடத்தப்பட்ட கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மாவட்ட வருவாய் அலுவலர் கேட்டறிந்தார்.

பின்னர், பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது. அப்போது, குடகனாறு பாசன படுகை மற்றும் குடிநீரை பயன்படுத்தும் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒரு மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

அனுமந்தராயன்கோட்டை, ஆத்தூர், அக்கரைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு குடகனாறு தான் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக உள்ளது.

ஆனால் தற்போது குடகனாறு ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. மேலும் குடகனாறுக்கு தண்ணீர் வரும் வழித்தடங்களும் பராமரிப்பு இன்றி சேதமடைந்து உள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் தான் அனுமந்தராயன்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடந்த மாதம் உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் நடந்த பேச்சுவார்த்தையின் போது, குடகனாறு பகுதிக்கு 5 நாட்களும், மேல்வாய்க்கால் பகுதிக்கு 4 நாட்களும் குடிநீரை பங்கீடு செய்து வழங்கப்படும். நிரந்தர நீர்ப்பங்கீட்டு ஒப்பந்தமுறை அமல்படுத்தும் வரை இதே முறையில் தண்ணீர் வழங்கப்படும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் குடகனாறு பகுதியை சேர்ந்த விவசாயிகள், இளைஞர்கள் நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் பகுதிக்கு சென்று குடகனாறுக்கு தண்ணீரை திருப்பி விட்டு வந்தனர். அப்போது மற்றொரு தரப்பை சேர்ந்தவர்கள் குடகனாறு பகுதியை சேர்ந்த விவசாயிகள், இளைஞர்களை வழிமறித்து தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து போலீசாரிடமும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும் பலமுறை புகார் அளித்தோம். ஆனால் நடவடிக்கை இல்லை.

எனவே குடகனாறு பிரச்சினையில் கெ- லக்டர் நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும். அத்துடன் சுழற்சி முறையில் நீர் பங்கீடு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். குடகனாறு நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர், இந்த பிரச்சினை குறித்து கலெக்டர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதையடுத்து குஜிலியம்பாறை ஒன்றியம் கோட்டாநத்தம் ஊராட்சி வசந்த கதிர்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளித்த மனுவில், கோட்டாநத்தம் ஊராட்சியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்தன. இந்த திட்டத்தை செயல்படுத்தியதில் ரூ.3 கோடி வரை ஊழல் நடந்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்த வேண்டும்.

மேலும் அது தொடர்பான அறிக்கையை குடியரசு தினத்தையொட்டி நடத்தப்படும் கிராம சபை கூட்டத்தின் போது பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். அத்துடன் ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த தொகையை சம்பளமாக வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். இந்த மனு உள்பட நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மொத்தம் 274 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்