யாருக்கு வாக்களித்தனர் என்று அறிவித்ததால் கல்லல் யூனியன் தலைவர் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் - கலெக்டரிடம் கவுன்சிலர்கள் மனு

தலைவர் தேர்தலில் யாருக்கு கவுன்சிலர்கள் வாக்களித்தனர் என்பதை அறிவித்ததால் கல்லல் யூனியன் தலைவர் தேர்தல் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று யூனியன் கவுன்சிலர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2020-01-13 22:15 GMT
சிவகங்கை,

கலெக்டர் ஜெயகாந்தனை கல்லல் யூனியன் கவுன்சிலர்கள் பிரேமா, உஷாராணி, ராஜமலர், சங்கீதா மற்றும் கோமள வள்ளி ஆகியோர் சந்தித்து தனித்தனியாக கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது:-

கல்லல் யூனியன் தலைவரை தேர்வு செய்வதற்காக மறைமுக தேர்தல் கடந்த 11-ந் தேதி கல்லல் யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் கல்லல் ஒன்றியத்தில் தேர்வு பெற்ற 16 கவுன்சிலர்கள் கலந்து கொண்டு மறைமுகமாக தங்களது வாக்கை அளித்தனர்.

மேலும் அதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு பதிவான வாக்குகளை எண்ணும் போது எந்த வேட்பாளருக்கு எந்த கவுன்சிலர் வாக்களித்தார் என்று அனைவரின் முன்னிலையிலும் அவர்கள் அறிவித்தனர். அவர் இவ்வாறு அறிவித்தது சட்ட விரோதமான செயலாகும். அப்போது நாங்கள் இது குறித்து எங்களது எதிர்ப்பை தெரிவித்தோம். ஆனால் எங்கள் எதிர்ப்பை அவர்கள் பொருட்படுத்தாமல் கட்டாயமாக தீர்மான புத்தகத்தில் கையொப்பம் பெற்றனர். எனவே விதிகளை மீறி நடத்தப்பட்ட இந்த தேர்தலை செல்லாது என்ற அறிவித்துவிட்டு ஜனநாயக முறைப்படி மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்