பண்ருட்டி அருகே, போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்த டிரைவர் சாவு

பண்ருட்டி அருகே போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்த டிரைவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-01-13 23:00 GMT
பண்ருட்டி, 

பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பம் அருகே உள்ள செரத்தங்குழியை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் ஆனந்தராமன் (வயது 27). கார் டிரைவர். இவரது மனைவி கலைச்செல்வி(22). இவர்களுக்கு அஸ்வின்(2), ராஜா(1) என்று 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தால் அதே பகுதியில் உள்ள ஹாலோ பிளாக் விற்பனையாளர் ஒருவரை எரித்துக் கொலை செய்ய முயன்றதாக கூறி ஜெயராமனை முத்தாண்டிக்குப்பம் போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து சொந்த ஊருக்கு வந்த ஆனந்தராமன், கடந்த 9-ந்தேதி மாலை முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையம் முன்பு வந்தார். அங்கு தனது தந்தை மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்து விட்டதாக கூறி, திடீரென தான் கையில் எடுத்து வந்த கேனில் இருந்த பெட்ரோலை, தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில், ஆனந்தராமன் போலீஸ் நிலையத்துக்குள் ஓட முயன்றார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் போலீசார், ஆனந்தராமனை தடுத்து, அவரது உடலில் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், பின்னர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், நேற்று காலை ஆனந்தராமன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து செரத்தங்குழியில் முத்தாண்டிக்குப்பம் குறுக்கு ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராசன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் காடாம்புலியூர் மலர்விழி, புதுப்பேட்டை ரேவதி, முத்தாண்டிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார், முன்னாள் எம்.எல்.ஏ. சொரத்தூர் ராஜேந்திரன் ஆகியோர் நேரில் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், ஹாலோ பிளாக் விற்பனையாளரை எரித்து கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் உண்மை குற்றவாளியை கைது செய்வதுடன், ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள ஜெயராமனை உடனடியாக விடுவிக்க வேண்டும், உயிரிழந்த ஆனந்தராமனின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கி, தேவையான உதவியை பெற்று தர வேண்டும் என்று தெரிவித்தனர்.

இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதுடன், ஆனந்தராமனின் குடும்பத்துக்கு தேவையான உதவியை செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையேற்று அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்