சரக்கு ஆட்டோ மீது பள்ளி வாகனம் மோதல்: மாணவிகள் உள்பட 4 பேர் படுகாயம்

சரக்கு ஆட்டோ மீது பள்ளி வாகனம் மோதிய விபத்தில், மாணவிகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2020-01-13 22:25 GMT
அனுப்பர்பாளையம்,

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே கோவை பப்ளிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு திருப்பூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் பள்ளி வேனில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். நேற்று காலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் பள்ளியை நோக்கி சென்றுகொண்டிருந்தது. வேனை பிச்சம்பாளையத்தை சேர்ந்த சுகுமார் (வயது 62) என்பவர் ஓட்டிச்சென்றார். திருப்பூர் 15 வேலம்பாளையத்தை அடுத்த சோளிபாளையம் அருகே சென்ற போது திடீரென முன்னால் சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ மீது பள்ளி வேன் பயங்கரமாக மோதியது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவ-மாணவிகள் அலறினார்கள். இதில் டிரைவர் சுகுமார், வேனில் இருந்த பிளஸ்-2 மாணவிகள் சமந்தா (17), தீக்‌ஷா (17) ஆகியோர் படுகாயமடைந்தனர். மேலும் வேனில் சென்ற திவியேஷ் (17) என்ற மாணவன் விபத்தை கண்ட அதிர்ச்சியில் மயக்கமடைந்தான். இதேபோல் வேனுக்கு பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்த முஸ்தபா என்பவர் திடீரென வேன் பிரேக் போட்டதால் மோட்டார்சைக்கிளுடன் வேனில் மோதினார். இதில் அவருக்கும் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து 2 மாணவிகள் உள்பட 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த 15 வேலம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் மற்ற மாணவர்களை வேறு வாகனம் மூலமாக பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்