கவர்னருடன் சந்திப்பு: என்னை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் - தனவேலு எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி

கவர்னரை தனவேலு எம்.எல்.ஏ. சந்தித்து பேசினார். அப்போது அவர் அளித்த பேட்டியில் ‘என்னை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்’ என்று தெரிவித்தார்.

Update: 2020-01-14 00:05 GMT
புதுச்சேரி, 

புதுச்சேரி பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு, முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தினார். கட்சியின் மேலிட பார்வையாளரையும் கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக கட்சி மேலிடத்தில் புகார் தெரிவிப்பதாக கூறினார்.

இந்தநிலையில் நேற்று மாலை கவர்னர் கிரண்பெடியை தனவேலு எம்.எல்.ஏ. சந்தித்து பேசினார். அப்போது கவர்னரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். பின்னர் கவர்னர் மாளிகை முன் நிருபர்களிடம் தனவேலு எம்.எல்.ஏ. கூறியதாவது:-

நான் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு தெரிவித்ததும் ரகசிய கூட்டம் நடத்தி எனது தொகுதியில் நிறைவேற்றப்படும் நலத்திட்ட உதவிகளை தடுக்க முயற்சிப்பதாக எனக்கு புகார்கள் வந்தன. இது குறித்து கவர்னரை சந்தித்து விளக்கினேன். முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மீது ஏராளமான ஊழல் புகார்கள் கூறலாம். இது தொடர்பான கோப்புகளை நான் சேகரித்து வருகிறேன்.

ஆளும் கட்சி அனுப்பும் கோப்புகளை கவர்னர் தடுத்து நிறுத்துவதாக கூறி வருகின்றனர். அது முற்றிலும் தவறு. இலவச துணி வழங்குவதில் ஒருவருக்கு ரூ.500 ஒதுக்கி விட்டு அதில் ரூ.200 மட்டுமே செலவு செய்கின்றனர். மீதி தொகையை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பங்கிட்டு கொள்கின்றனர். இதை கண்டுபிடித்து கவர்னர் கோப்புகளை திருப்பி அனுப்புகிறார். அவர் நலத்திட்டங்களை தடுக்கவில்லை.

எனது தொகுதி மக்கள் மத்தியில் எனக்கு செல்வாக்கு உள்ளது. எனவே என்னை காங்கிரஸ் கட்சியால் அழிக்க முடியாது. என்னை அழிக்க நினைப்பவர்கள் தான் அழிந்து போவார்கள். அவர்களது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரும். ஊழல் குறித்து அனைத்து கோப்புகளையும் முறையாக தயாரித்து விட்டு அதன்பின் சி.பி.ஐ.யிடம் புகார் தெரிவிப்பேன். கட்சி தலைமையிடமும் புகார் செய்ய உள்ளேன்.

இது குறித்து கட்சி தலைமையிடம் நேரம் ஒதுக்கி தரும்படி கேட்டுள்ளேன். பொங்கல் பண்டிகைக்கு பின்னர் டெல்லி சென்று கட்சியின் மேலிட தலைவர்களை சந்தித்து புகார் செய்வேன்.

பாப்ஸ்கோ நிறுவனம் தற்போது மூடும் நிலையில் உள்ளது. நான் பெயரளவில் மட்டும் தான் தலைவர். என்னால் அதில் எதுவும் செய்ய முடியாது. புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு வாரியத் தலைவர் பதவி வழங்கும் கோப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். நான் காங்கிரஸ் கட்சியை விட்டு போக மாட்டேன். தேவைப்பட்டால் அவர்கள் என் மீது நடவடிக்கை எடுக்கட்டும். கவர்னரை சந்தித்த போது முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மீதான விவகாரம் தொடர்பாகவும் அவர் என்னிடம் கேட்டறிந்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்