போக்குவரத்து நெரிசலை சரி செய்யக்கோரி புறக்காவல் நிலையத்தில் உதவி கலெக்டர் தர்ணா

குன்னூரில் போக்குவரத்து நெரிசலை சரி செய்யக்கோரி புறக்காவல் நிலையத்தில் உதவி கலெக்டர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-01-14 23:00 GMT
குன்னூர்,

நீலகிரி மாவட்டம் குன்னூர் பஸ் நிலையத்தில் இருந்து உழவர் சந்தைக்கு செல்லும் சாலை மிகவும் குறுகலானது ஆகும். இந்த சாலையின் இருபுறங்களிலும் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

குன்னூர் உதவி கலெக்டர் ரஞ்சித் சிங், அந்த சாலை வழியாகத்தான் தினமும் தனது குடியிருப்பில் இருந்து அலுவலகத்துக்கு சென்று வருகிறார். அப்போது சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை பார்த்து சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்துவதை கட்டுப்படுத்துமாறு போலீசாரிடம் அறிவுறுத்தி இருந்தார். ஆனாலும் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து கொண்டே இருந்தது.

நடுரோட்டில் நிறுத்தப்பட்ட வாகனம்

இந்த நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் உதவி கலெக்டர் ரஞ்சித் சிங், அலுவலகத்தில் இருந்து தனது குடியிருப்புக்கு வாகனத்தில் புறப்பட்டார். அப்போது மேற்கண்ட சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த உதவி கலெக்டர், வாகனத்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு, அங்குள்ள புறக்காவல் நிலையத்துக்கு சென்றார். இதனால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையில் போக்குவரத்து நெரிசலை சரி செய்யக்கோரி புறக்காவல் நிலையத்தில் அமர்ந்து, உதவி கலெக்டர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும், அங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு வரும் வரை எங்கும் செல்ல போவதில்லை எனக்கூறினார்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், அங்கு விரைந்து வந்தார். பின்னர் உதவி கலெக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இனிமேல் உழவர் சந்தை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பார்த்து கொள்வதாக உறுதி அளித்தார். அதன்பின்னர் உதவி கலெக்டர் ரஞ்சித் சிங், அங்கிருந்து வெளியேறி வாகனத்தில் ஏறி தனது குடியிருப்புக்கு புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்