ஒழுக்கத்தை உருவாக்கி கொடுக்கும் இடம் விளையாட்டு மைதானம் - அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு

ஒழுக்கத்தை உருவாக்கி கொடுக்கும் இடமாக விளையாட்டு மைதானம் திகழ்கிறது, என அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.

Update: 2020-01-14 22:45 GMT
காட்பாடி,

அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் சார்பில் காட்பாடியை அடுத்த தொண்டான்துளசி கிராமத்தில் விளையாட்டு மைதானம் புதிதாக அமைக்கப்பட்டது. இதன் தொடக்க விழா மற்றும் இளைஞர்கள், பெண்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது.

விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் தலைமை தாங்கி பேசினார். செஞ்சி ஜி.லோகநாதன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்து பேசினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு விளையாட்டு மைதானத்தை தொடங்கி வைத்து, இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி பேசினார்.

அவர் பேசியதாவது:-

நான் கிராமங்களுக்கு செல்லும்போதெல்லாம் அங்குள்ள இளைஞர்கள் விளையாட்டு மைதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் தேவையென்று மனு கொடுக்கின்றனர். இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கிராமங்களில் அம்மா விளையாட்டு மைதானம் அமைக்க உத்தரவிட்டு, அது நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது.

விளையாடத் தொடங்கி விட்டால் மாலைநேரம் எப்போது வரும் என எதிர்பார்க்க தொடங்கி விடுவோம். நானும் சட்டமன்றம் நடக்கும்போதெல்லாம் சட்டசபை முடிந்தவுடன் வீட்டுக்கு வந்து சுமார் ஒரு மணிநேரம் விளையாடுவேன். அதனை வழக்கமாகவே வைத்துள்ளேன். ஒழுக்க நெறிகளை கடைப்பிடிக்கும் இடமாகவும், ஒழுக்கத்தை உருவாக்கி கொடுக்கும் இடமாகவும் விளையாட்டு மைதானம் திகழ்கிறது. சாதி, மதம் இல்லாமல் ஒற்றுமையுடன் பழகும் இடமாக விளையாட்டு மைதானம் திகழ்கிறது. விளையாட்டில் ஈடுபடும்போதுதான் ஆர்வம் அதிகரிக்கிறது.

கிராமங்களில் உள்ள இளைஞர்கள் விளையாட்டின் மூலம் தங்கள் திறமை மற்றும் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு உலக அளவில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.2 கோடி பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுபோன்ற திட்டம் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. இளைஞர்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, ஆவின் தலைவர் வேலழகன், மாவட்ட கூட்டுறவு பண்டக சாலை தலைவர் சுமைதாங்கி சி.ஏழுமலை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஜெயப்பிரகாசம், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசன், சிவா, ஒன்றிய துணை செயலாளர் பொன்முடி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்குமார், கே.வி.குப்பம் தாசில்தார் சுஜாதா, எடக்கிருஷ்ணாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் டி.கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்