குடிசைக்குள் கார் புகுந்ததில் மூதாட்டி பரிதாப சாவு தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது

பரமத்திவேலூர் அருகே குடிசைக்குள் கார் புகுந்ததில் மூதாட்டி உயிர் தூக்கத்திலேயே பிரிந்தது.

Update: 2020-01-14 23:00 GMT
பரமத்திவேலூர்,

பரமத்திவேலூர் அருகே பரமத்தி தொலைதொடர்பு அலுவலகம் எதிரே கரூர்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்தநிலையில் நேற்று காலை கரூரில் இருந்து நாமக்கல் நோக்கி கார் ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் சென்றது. இந்த கார் தொலைதொடர்பு அலுவலகம் அருகே வந்த போது, அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் மொபட்டில் சாலையை கடக்க முயன்றார்.

இதையடுத்து அவர் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் காரை திருப்ப முயன்றார். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த ஒரு குடிசைக்குள் புகுந்தது. இதில் அங்கு கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த கவுசல்யா (வயது 65) என்பவர் மீது கார் மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவலறிந்த பரமத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் காயமடைந்த, காரில் இருந்த ஆண்டகளூர் கேட் பகுதியை சேர்ந்த டிரைவர் புவனேஷ்குமார் (25), இவரின் தாயார் ராஜலெட்சுமி (46), உறவினர் ஞானம்மாள் (66) ஆகிய 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் கவுசல்யா உடல் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்