சேலத்தில் வெவ்வேறு இடங்களில் விபத்து: ஜவ்வரிசி ஆலை அதிபர் உள்பட 2 பேர் பலி

சேலத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் ஜவ்வரிசி ஆலை அதிபர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

Update: 2020-01-14 22:15 GMT
கொண்டலாம்பட்டி,

சேலம் அன்னதானப்பட்டி கந்தப்பா காலனியை சேர்ந்தவர் அத்தியப்பன் (வயது 77). இவர் சேலத்தில் ஜவ்வரிசி ஆலை நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு கொண்டலாம்பட்டி அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் உறவினர் ஒருவரை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அவர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மினி லாரி அவருடைய மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த அத்தியப்பன் மீது மினி லாரியின் டயர்கள் ஏறியது. இதில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கட்டிட தொழிலாளி

தர்மபுரி மாவட்டம் பாப்பநாயக்கன்வலசு பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (42). இவர் கோவையில் கட்டிட தொழிலில் ஈடுபட்டு வந்தார். பொங்கல் பண்டிகையையொட்டி அவர் கோவையில் இருந்து ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். சேலம் ராக்கிப்பட்டி அருகே வந்தபோது திடீரென அவர் நிலைதடுமாறி முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதினார்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரமசிவம் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்