பொங்கல் பண்டிகையையொட்டி விழுப்புரம் ரெயில், பஸ் நிலையங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

பொங்கல் பண்டிகையையொட்டி விழுப்புரம் ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Update: 2020-01-14 23:00 GMT
விழுப்புரம்,

தமிழர்களின் பாரம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகை இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைவீதிகளுக்கு கூட்டம், கூட்டமாக சென்றனர்.

மேலும் வெளியூரில் தங்கியிருந்து பணியாற்றி வருபவர்களும், படித்து வருபவர்களும் அவரவர் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட அவரவர் சொந்த ஊர்களுக்கு கடந்த 3 நாட்களாக புறப்பட்டுச்சென்ற வண்ணம் உள்ளனர். நேற்றும் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

இதனால் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் வழக்கத்திற்கும் மாறாக பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பஸ்சில் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொண்டு சென்றனர். சிலர் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டதையும் காண முடிந்தது.

சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்

மேலும் பொங்கல் விடுமுறையை கழிக்க அவரவர் சொந்த ஊர்களுக்கு கார்களிலும் சென்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவில் வாகனங்கள் அணிவகுத்து சென்றன. ஒரே நேரத்தில் அணிவகுத்து சென்ற வாகனங்களால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. உடனே சுங்கச்சாவடி அதிகாரிகள் விரைந்து சென்று வாகனங்களுக்கு சுங்கவரி வசூல் செய்து உடனுக்குடன் செல்ல வழிவகை செய்தனர். இதேபோல் விழுப்புரம் ரெயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. சென்னையில் இருந்து விழுப்புரம் வழியாக செல்லக்கூடிய அனைத்து ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

மேலும் செய்திகள்