சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 2 வயது குழந்தை மீட்பு

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 2 வயது குழந்தையை நேற்று போலீசார் மீட்டனர்.

Update: 2020-01-14 23:15 GMT
சென்னை, 

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் மர்சீனா(வயது 25). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது குழந்தைகளான மஷிதா(6), ரஷிதா(2) ஆகியோருடன் சென்னை வந்தார். மர்சீனாவுக்கு மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஹமீது என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. ஹமீது தனது நண்பர் மற்றும் மர்சீனாவுடன் சென்னையில் ஒன்றாக சுற்றியதாக கூறப்படுகிறது.

ஹமீதுக்கு அவரது நண்பருடன் திடீரென தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் ஹமீது, மர்சீனா மற்றும் அவரது குழந்தைகளுடன் கடந்த 13-ந்தேதி இரவு சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தின் 10-வது நடைமேடையில் படுத்து தூக்கினார். அதிகாலை மர்சீனா எழுந்து பார்த்தபோது தனது 2 வயது குழந்தை ரஷிதா மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் சென்டிரல் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் சென்னை சென்டிரல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமஸ் ஜேசுதாசன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து குழந்தையை கடத்தி சென்றவர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஹமீதின் நண்பரான மேற்கு வங்காளத்தை சேர்ந்த தீபக் மண்டல்(32) குழந்தையை கடத்தியது தெரியவந்தது.

தமிழகம் முழுவதும் உள்ள ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு குழந்தை கடத்தல் குறித்து தகவல் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் மும்பை- நாகர்கோவில் ரெயிலில் சந்தேகத்துக்கு இடமாக ஒருவர் சிறு குழந்தையுடன் பிச்சை எடுத்து வருவதாக திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சென்ற போலீசார், சந்தேகத்துக்கு இடமான அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர் தீபக் மண்டல் என்பதும், சென்னையில் இருந்து குழந்தை ரஷிதாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் குழந்தை ரஷிதாவை மீட்டு, முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று சென்னைக்கு அழைத்து வந்தனர்.

நேற்று காலை எழும்பூர் ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு எட்வர்ட் மற்றும் இன்ஸ்பெக்டர் தாமஸ் ஜேசுதாசன் குழந்தை ரஷிதாவை, அவரது தாயார் மர்சீனாவிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்