சிதம்பரம், விருத்தாசலம் பகுதி பள்ளிகளில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

சிதம்பரம், விருத்தாசலம் பகுதியில் உள்ள பள்ளிகளில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2020-01-14 22:30 GMT
காட்டுமன்னார்கோவில்,

சிதம்பரம் மற்றும் விருத்தாசலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அந்த வகையில் காட்டும்னார்கோவிலில் உள்ள எம்.ஆர்.கே. பொறியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு கல்லூரி சேர்மன் எம்.ஆர்.கே.பி. கதிரவன் தலைமை தாங்கினார். கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகள் பொங்கலிட்டு கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் பொறியியல் கல்லூரி முதல்வர் ஆனந்தவேலு, நிர்வாக அதிகாரி கோகுலகண்ணன், மேலாளர் விஸ்வநாத், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் வெங்கடேசன், துணை முதல்வர் அறிவழகன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காட்டுமன்னார்கோவில் கலைமகள் மெட்ரிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு கல்வி குழும நிறுவனர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் பரணிதரன் முன்னிலை வகித்தார். பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் கலியபெருமாள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

இதில் கிட்ஸி பள்ளி தாளாளர் முத்து நவநீதம் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுடன் இணைந்து பொங்கலிட்டு கொண்டாடினார். தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி குழும செயலாளர் பாலறாவாயன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். விழாவில், பள்ளி முதல்வர் யோகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிதம்பரம்

சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவியில் உள்ள வள்ளலார் உயர்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளியின் செயலாளர் ராமலிங்கம், துணை செயலாளர் விவேக்ராம், தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

சிதம்பரத்தில் உள்ள தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவுக்கு தாளாளர் மகேஷ் தலைமை தாங்கினார். சேர்மன் லட்சுமி சண்முகம் கலந்து கொண்டு பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். பின்னர் மாணவ, மாணவிகளுக்கிடையே சிலம்பாட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பள்ளி முதல்வர் கவிதா மகேஷ், தலைமை ஆசிரியர் ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பு.முட்லூரில் உள்ள ஜவஹர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவுக்கு பள்ளி தாளாளர் பிரியங்கா மதியழகன் தலைமை தாங்கினார். முன்னாள் ஜமாத் நிர்வாகிகள் பி.கே.இஸ்மாயில், கே.எஸ். இஸ்மாயில், முகமது ரபி, முகமது ஹாபீஸ், அப்துல்கலாம், முபாரக், பிரபு மற்றும் ஜகாங்கிர், தலைமை ஆசிரியர் ஜெயசீலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் தசரதன் வரவேற்றார். இதில் பு.முட்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசீலன், ஜமாத் நிர்வாகிகள் முகமது அன்வர், பகீர் மொகைதீன், அக்குபாய் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் ஆசிரியர் சக்திதாசன் நன்றி கூறினார்.

விருத்தாசலம்

விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை வி.சாத்தமங்கலத்தில் உள்ள ஆண்டனி பப்ளிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதற்கு பள்ளி தாளாளர் ஜார்ஜ் யுவராஜ் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் லிடியா ஜார்ஜ் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மூத்த வக்கீல் பாலசந்திரன், ஹேமா பாலசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விழாவில் பொங்கலிட்டு அனைவருக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள இண்பேன்ட் பிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதற்கு பள்ளி தாளாளர் டாக்டர் விஜயகுமாரி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. குழந்தை தமிழரசன் முன்னிலை வகித்தார். விழாவில் பொங்கலிட்டு அனைவருக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டது. பின்னர் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பண்ருட்டி

பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதற்கு பள்ளியின் நிறுவனர் மாயகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தாளாளர் ராமகிருஷ்ணன், முதல்வர் ரவி ஆகியோர் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து பேசினர். இதில் தமிழர் பண்பாட்டை விளக்கும் வகையில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. முன்னதாக பள்ளி வளாகத்தில் பொங்கலிடப்பட்டு, அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்