ரங்கசாமி தலைமையிலான ஆட்சி மாற்றத்துக்கு கைக்கூலியாக செயல்பட்டார் தனவேலு எம்.எல்.ஏ. மீது அரசு கொறடா அனந்தராமன் தாக்கு

ரங்கசாமி தலைமையிலான ஆட்சியை கொண்டுவர தனவேலு எம்.எல்.ஏ. கைக்கூலியாக செயல்பட்டார் என்று அரசு கொறடா அனந்தராமன் குற்றஞ்சாட்டினார்.

Update: 2020-01-14 22:30 GMT
புதுச்சேரி, 

ரங்கசாமி தலைமையிலான ஆட்சியை கொண்டுவர தனவேலு எம்.எல்.ஏ. கைக்கூலியாக செயல்பட்டார் என்று அரசு கொறடா அனந்தராமன் குற்றஞ்சாட்டினார்.

ஊழல் புகார்

புதுவை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ள பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான தனவேலு நேற்று முன்தினம் கவர்னர் கிரண்பெடியை சந்தித்து பேசினார். அப்போது அமைச்சரவை மீது குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கினார். இதுபற்றி சி.பி.ஐ.யிடம் புகார் தெரிவிக்குமாறு அவரை கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தினார். கட்சியில் இருந்து கொண்டே அரசுக்கு எதிராக செயல்படும் தனவேலு எம்.எல்.ஏ.வின் இந்த நடவடிக்கைக்கு அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தநிலையில் கட்சி மேலிடத்திடம் தெரிவித்து தனவேலு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல் அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் ஆகியோர் தெரிவித்தனர். இதையொட்டி அவர்கள் டெல்லியில் தற்போது முகாமிட்டுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

கைக்கூலி

தனவேலு எம்.எல்.ஏ. கடந்த 2 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் செயல்பாடு இல்லாமல் உள்ளார். எனவே புதுவை அரசையோ, முதல்-அமைச்சரையோ விமர்சிக்கும் தகுதி அவருக்கு இல்லை. காங்கிரஸ் ஆட்சியை அகற்றிவிட்டு ரங்கசாமி தலைமையிலான ஆட்சியை கொண்டுவர அவர் கைக்கூலியாக செயல்பட்டார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டனுடன் மாகி சென்று அங்கு சுயேட்சை எம்.எல்.ஏ.வான ராமச்சந்திரனிடம் அதற்காக பேசி ஆதரவு தர கேட்டுள்ளனர். அது எடுபடாத நிலையில் தனவேலு எம்.எல்.ஏ. காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை.

எம்.எல்.ஏ.க்களுக்கு பல பிரச்சினை இருக்கும். கவர்னரின் தொல்லை காரணமாக கடினமான சூழலில் ஆட்சி நடந்து வருகிறது. பிரச்சினைகளை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களிடம் தெரிவித்து இருக்கலாம். அதைவிடுத்து போராட்டம் நடத்துவது, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிப்பதற்கு சமம்.

பா.ஜனதா ஏஜெண்டு

இந்த ஆட்சி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அவருக்கு தெம்பு, திராணி இருக்கிறதா? பாகூர் தொகுதியில் மதுக்கடைகளில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அரசுக்கு எதிராக பேசியதும் இவரை வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. சந்திக்கிறார். ஆட்சிமாற்றம்தான் அவர்களது விருப்பம். தனவேலு பாரதீய ஜனதாவின் ஏஜெண்டாக செயல்படுகிறார்.

ஆட்சிக்கு விரோதமாக ஊழல் புகார் சொல்லும் அவர் வகிக்கும் பாப்ஸ்கோ மீது சி.பி.ஐ. விசாரணை வைக்கலாம். ரூர்பன் திட்டத்தின்கீழ் பாகூர் தொகுதியில் ரூ.50 கோடிக்கு வேலைகள் நடக்கிறது. தரைப்பாலம் ரூ.12 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. உள்விளையாட்டு அரங்கத்துக்காக ரூ.1.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கன்னியகோவில் முதல் தவளக்குப்பம் வரை ரூ.9 கோடிக்கு சாலை பணி நடந்துள்ளது.

கட்சி விரோத நடவடிக்கை

4 வருடங்களுக்கு பிறகு இப்போது குற்றச்சாட்டு சொல்வது நாகரிகமற்றது. அவர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து கட்சி நிர்வாகிகள் மேலிட தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான், விஜயவேணி ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்