பாண்லே நிறுவனம் லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

புதுவையில் அரசு சார்பு நிறுவனங்கள் என்றாலே நஷ்டம் என்ற நிலைதான் உள்ளது.

Update: 2020-01-14 22:30 GMT
புதுச்சேரி, 

புதுவையில் அரசு சார்பு நிறுவனங்கள் என்றாலே நஷ்டம் என்ற நிலைதான் உள்ளது. குறிப்பாக சாராய வடிசாலை, மின்திறல் குழுமம் உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்களை தவிர அனைத்தும் நஷ்டத்தில்தான் இயங்குகின்றன.

வேலைக்கு வைக்க...

கடந்த காலங்களில் நன்றாக இயங்கிய இந்த கூட்டுறவு நிறுவனங்களில் அவ்வப்போது ஆட்சியில் இருந்தவர்கள் தங்களது ஆதரவாளர்களை சகட்டு மேனிக்கு பணிக்கு அமர்த்தினர். ஆட்களை வேலைக்கு வைப்பதற்காக பல கிளைகள் திறக்கப்பட்டன. அவ்வாறு அரசு சார்பு நிறுவனங்களின் கடைகள் திறக்கப்பட்டு வாடகை கொடுக்க முடியாமல் பல கடைகளை கட்டிட உரிமையாளர்கள் வற்புறுத்தி காலி செய்ய வைத்தனர். தனியாரால் லாபத்தில் இயக்கப்படும் மதுபான கடைகளுக்கான உரிமம் கொடுத்து மதுபான விற்பனை செய்த கூட்டுறவு நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்கின.

பாண்லே

தற்போது அந்த இடத்துக்கு கூட்டுறவு நிறுவனமான பாண்லேவும் வந்துவிட்டது. புதுவை மாநில மக்களில் பெரும்பாலானவர்கள் விரும்பி வாங்கு வது பாண்லே பால் தான். நாளொன்றுக்கு இந்த நிறுவனம் மூலம் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் பால் சப்ளை செய்யப்படுகிறது.

இதில் உள்ளூர் உற்பத்தி நாளொன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் மட்டுமே. மீதி பால் பக்கத்து மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் முறைகேடுகள் நடப்பதாகவும் அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் குற்றஞ்சாட்டி வருகின்றன. தற்போது இந்த நிறுவனம் ரூ.15 கோடி அளவுக்கு நஷ்டத்தில் இயங்குகிறது. இந்த நஷ்டத்தை ஈடுசெய்ய தற்போதைய சூழ்நிலையில் அரசின் மானியம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நிர்வாக சீர்கேடு

இந்த நிறுவனத்தின் நஷ்டத்துக்கும் அதிக அளவில் ஆட்கள் திணிப்பே காரணம் ஆகும். வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யும் பாலுக்கு உரிய தொகையை கொடுக்க முடியாத நிலையும் தற்போது இங்கு நிலவுவதாக கூறப்படுகிறது. பாண்லே நிறுவனத்துக்கு நிரந்தர மேலாண் இயக்குனர் இல்லை என்பதால் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக ஊழியர்கள் சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதால் ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

லாபத்தில் இயங்க...

அதுமட்டுமின்றி பாண்லே பால் விற்பனை செய்யும் முகவர்களுக்கும் உயர்த்தப்பட்ட பாலின் விலைக்கு தகுந்த கமிஷன் வழங்கவில்லை என்று கூறி போராட்டம் நடத்தி உள்ளனர். அதன்பின்னரே அவர்களுக்கு கமிஷனை உயர்த்தித்தர ஆணை வெளி யிடப்பட்டது. பல்வேறு விதமான நிதி நெருக்கடிகளில் சிக்கி தவிக்கும் பாண்லே நிறுவனம் தற்போது நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. புதுவை மாநில மக்களுக்கு தரமான பாலை கொடுத்து வரும் இந்த நிறுவனத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. மற்ற அரசு சார்பு நிறுவனங்களைப்போல் இந்த நிறுவனத்தை லாபநோக்கோடு பார்க்கக்கூடாது. இது ஒரு சேவை நிறுவனம். எனவே தேவையான அளவுக்கு அரசு நிதியுதவி அளித்து பாண்லே நிறுவனத்தை லாபத்தில் இயங்க செய்ய வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கருத்தாக உள்ளது.

மேலும் செய்திகள்