முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பெயிண்டர் பலி - நண்பர்களுடன் குளிக்க சென்றபோது பரிதாபம்

பொங்கல் பண்டிகை அன்று நண்பர்களுடன் குளிக்க சென்றபோது, முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பெயிண்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2020-01-16 22:45 GMT
ஸ்ரீவைகுண்டம்,

தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இவருடைய மகன் முத்துகுமார் (வயது 35). இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு விண்மலர் என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர்.

நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, முத்துகுமார் வேலைக்கு செல்லவில்லை. மாலையில் அவர், அப்பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் 5 பேருடன் முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றார்.

முறப்பநாடு கைலாசநாத சுவாமி கோவில் படித்துறை அருகில் அனைவரும் குளித்தனர். அப்போது முத்துகுமார் எதிர்பாராதவிதமாக ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்தபோது திடீரென்று தண்ணீரில் மூழ்கினார். இதனை அறியாமல் மற்ற நண்பர்கள் அனைவரும் குளித்து விட்டு கரைக்கு திரும்பினர். பின்னர் சிறிதுநேரத்தில் அவர்கள், முத்துகுமார் மாயமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து முறப்பநாடு போலீசாருக்கும், ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜமூர்த்தி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தாமிரபரணி ஆற்றில் இறங்கி தேடினர். இரவு வரையிலும் தேடியும் அவருடைய உடல் கிடைக்கவில்லை.

தொடர்ந்து நேற்று காலையில் 2-வது நாளாக அவரது உடலை தேடும் பணி நடந்தது. அப்போது கோவில் படித்துறை அருகில் உள்ள அமலைச்செடிக்குள் சிக்கியிருந்த அவரது உடல் மீட்கப்பட்டது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொங்கல் பண்டிகை அன்று நண்பர்களுடன் குளிக்க சென்றபோது, தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பெயிண்டர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்