தஞ்சையில், பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்தது: 4 பெண்கள் உடல் நசுங்கி பலி 5 பேர் படுகாயம்

தஞ்சையில், பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்ததில் 4 பெண்கள் உடல் நசுங்கி இறந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2020-01-16 22:15 GMT
கள்ளப்பெரம்பூர்,

தஞ்சை-திருச்சி சாலையில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம் எதிரே ஜெபக்கூடம் உள்ளது. இந்த ஜெபக்கூடத்தில் நேற்று முன்தினம் சிறப்பு ஜெப வழிபாடு நடந்தது. இந்த வழிபாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் பெங்களூரு, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்காக ஜெபக்கூட அரங்கில் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த பந்தலில் ஏராளமான பக்தர்கள் தங்கி இருந்தனர்.

நேற்று முன்தினம் காலை 11 மணி அளவில் இந்த பந்தலில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த பெங்களூரு நேதாஜி நகரை சேர்ந்த செல்வம் மனைவி செல்வி(வயது 45), அவருடைய மகள்கள் கீர்த்தி(22), ஜோதி(18), தேவராஜ் மனைவி கன்னியம்மாள்(48) அவரது மகள் கவிதா(25) மற்றும் சிலர் ஜெபக்கூடம் அருகே வல்லம்புதூர் பிரிவு சாலையில் உள்ள குளத்துக்கு சென்று குளித்தனர். பின்னர் அவர்கள் மீண்டும் ஜெபக்கூடத்துக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.

தாய்-மகள்கள் உள்பட 4 பேர் பலி

அப்போது அந்த சாலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி திருநகரை சேர்ந்த சத்தியநாராயணன்(27), தனது குடும்பத்துடன் காரில் வேளாங்கண்ணி நோக்கி வந்தார். காரில் சத்தியநாராயணின் தந்தை ராமச்சந்திரன்(67), தாய் ரேவதி(57) ஆகியோர் இருந்தனர். காரை சத்தியநாராயணன் ஓட்டினார்.

ஜெபக்கூடம் அருகே கார் வந்தபோது கண்இமைக்கும் நேரத்தில் நடந்து வந்த பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்தது. மேலும் அதே வேகத்தில் ஜெபக்கூடம் அருகே மொபட்டில் ஐஸ் விற்றுக்கொண்டிருந்த திருக்காட்டுப்பள்ளி லயன்கரையை சேர்ந்த பாலகிருஷ்ணன்(42) மீதும் கார் மோதி நின்றது. இதில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெங்களூருவை சேர்ந்த செல்வி, கவிதா ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

செல்வி மகள்கள் கீர்த்தி, ஜோதி, கன்னியம்மாள், ஐஸ்வியாபாரி பாலகிருஷ்ணன் மற்றும் காரை ஓட்டி வந்த சத்தியநாராயணன், காரில் இருந்த ராமச்சந்திரன், ரேவதி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கீர்த்தி இரவு பரிதாபமாக இறந்தார். கன்னியம்மாள் நேற்று காலை உயிரிழந்தார். ஜோதி, பாலகிருஷ்ணன், சத்தியநாராயணன், ராமச்சந்திரன், ரேவதி ஆகிய 5 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

வழக்குப்பதிவு

இந்த விபத்து குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான 4 பெண்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதில் செல்வி, கீர்த்தி ஆகியோரின் உடல்கள் பெங்களூருவுக்கும், கன்னியம்மாள் மற்றும் அவரது மகள் கவிதா ஆகியோரின் உடல்கள் அவர்களின் சொந்த ஊரான சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஊனத்தூர் பகுதிக்கும் கொண்டு செல்லப்பட்டன.

ஜெபக்கூடத்துக்கு வந்த 4 பெண்கள் கார் மோதி இறந்த சம்பவம் வல்லம் பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. 

மேலும் செய்திகள்