சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்தவருக்கு 2 ஆண்டு சிறை

கீழக்கரையில் தங்கி தொடர்ந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த இலங்கையை சேர்ந்தவரை 2 ஆண்டுகள் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2020-01-16 22:45 GMT
கீழக்கரை, 

இலங்கையை சேர்ந்தவர் முகமது ரிபாஸ் (வயது 36). இவர் கடந்த 2004-ம் ஆண்டு கொழும்புவில் இருந்து வேலை தேடி துபாய் சென்றார். அங்கிருந்து 2009-ல் சுற்றுலா விசாவில் சென்னை வந்தார். அங்கு அவர் ஜவுளிக்கடையில் வேலை பார்த்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கீழக்கரை கிழக்கு தெருவை சேர்ந்த ஒரு பெண்ணை 2011-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு தற்போது 4 குழந்தைகள் உள்ளனர். கீழக் கரையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இதனிடையே கடந்த 2014-ம் ஆண்டு போதை பொருள் கடத்தியதாக ரிபாஸ் உள்பட 4 பேரை கியூபிரிவு போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களுக்கு 2½ ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 2019 ஏப்ரல் மாதம் இவர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து வாட்ஸ் அப் குரூப் தொடங்கி இஸ்லாம் மற்றும் இந்துக்களுக்கு எதிராக பிரசாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர் குற்றங்கள் புரிந்த முகமது ரிபாஸ் வெளிநாடுகளில் வேலை நிமித்தமாக ஆட்களை சட்ட விரோதமாக அனுப்பி வந்தார்.

இதையடுத்து, இவரிடமிருந்து அமைதி மற்றும் நன்னடத்தை உறுதிமொழி ஆவணம் பெறப்பட்டது. உறுதிமொழி ஆவணத்தை மறைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு மூலம் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் ஸ்மார்ட் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட அரசு சலுகைகளை பெற்றார். இதுபற்றி அறிந்த காஞ்சிரங்குடி கிராம நிர்வாக அலுவலர் இதுகுறித்து கீழக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் நன்னடத்தை பிணைய காலமான 2 ஆண்டுகள் சிறையில் அடைக்க கீழக்கரை தாசில்தார் வீரராஜ் உத்தரவிட்டார்.

இந்தநிலையில் கன்னியா குமரி மாவட்டத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதான அப்துல் சமீம் என்பவர் கடந்த அக்டோபர் மாதம் கீழக்கரைக்கு வந்து முகமது ரிபாசை சந்தித்து விட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்துல் சமீம், கீழக்கரை பகுதியில் வேறு யாரை சந்தித்து சென்றுள்ளார் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்