அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி உயிரிழப்பு - நடவடிக்கை எடுக்க உறவினர்கள் வலியுறுத்தல்

விருதுநகர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படாததால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2020-01-16 22:30 GMT
விருதுநகர்,

விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார். கட்டிட தொழிலாளியான இவருடைய மனைவி கனகா (வயது21). இவர்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில் 3-வது பிரசவத்திற்காக நேற்றுமுன் தினம் மதியம் எம்.அழகாபுரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்.

அங்கு டாக்டர்கள் இல்லாத நிலையில் செவிலியர்களே சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை 4.30 மணி அளவில் கனகாவுக்கு ஆண்குழந்தை பிறந்து உள்ளது.

இந்நிலையில் குழந்தை பிறந்தபின்பும் கனகாவுக்கு தொடர்ந்து ரத்தபோக்கு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆஸ்பத்திரிக்கு வந்த டாக்டர் கனகாவை விருதுநகர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். ஆம்புலன்ஸ் வருவதற்கு 1½ மணிநேரம் தாமதம் ஆன நிலையில் மாலை 6.30 மணி அளவில் கனகா விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கனகா பரிதாபமாக உயிரிழந்தார். அதிக ரத்தபோக்கு காரணமாக கனகா இறக்க நேரிட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து கனகாவின் உறவினர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் இல்லாத நிலையில் செவிலியர்கள் சிகிச்சை அளித்ததால் டாக்டர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை சமரச படுத்திய பின்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.

இளம்பெண் கனகா இறந்தது தொடர்பாக அவரது கணவர் ரஞ்சித்குமார்(27) அளித்த புகாரின்பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்