மின் வேலியில் சிக்கி யானை சாவு விவசாயி கைது

தாளவாடி அருகே மின் வேலியில் சிக்கி யானை இறந்தது. இதுதொடர்பாக விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர்.

Update: 2020-01-16 23:15 GMT
தாளவாடி,

தாளவாடியை அடுத்த ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட திகினாரை மலைக்கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. விவசாயி. இவருக்கு வனப்பகுதியையொட்டி தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் அவர் மக்காச்சோளத்தை பயிரிட்டு உள்ளார். தோட்டத்துக்குள் புகுந்து மக்காச்சோள பயிரை வனவிலங்குகள் நாசம் செய்துவிடாமல் தடுப்பதற்காக அதைச்சுற்றிலும் அவர் மின்வேலி அமைத்து உள்ளார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை ஒன்று ரங்கசாமி தோட்டத்துக்குள் புகுந்தது. அப்போது அந்த யானை மின்சாரம் தாக்கி இறந்தது.

கைது

இதுபற்றி அறிந்தும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று யானையை பார்வையிட்டனர். மேலும் கால்நடை டாக்டர் அசோகன் சம்பவ இடத்துக்கு வந்து யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் யானை அந்த பகுதியில் குழிதோண்டி புதைக்கப்பட்டது. இதுபற்றி டாக்டர் அசோகன் கூறுகையில், ‘மின் வேலியில் சிக்கி இறந்த யானை 20 வயது உடைய பெண் யானை ஆகும்,’ என்றார்.

இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து ரங்கசாமியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்