ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடக்கும் பயணிகள்

கரூரில் ஆபத்தை உணராமல் ரெயில்வே தண்டவாளத்தை கடப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2020-01-17 22:15 GMT
கரூர், 

கரூர் ரெயில் நிலையம் வழியாக சேலம், ஈரோடு, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பயணிகள், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கரூரில் உள்ள டெக்ஸ்டைல், கொசுவலை, தனியார் நிதிநிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் வெளியிடங்களில் இருந்து கரூருக்கு வருவதற்கும், கரூரில் இருந்து வெளியிடங்களுக்கு செல்லவும் கரூர் ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் கரூர் வெங்கமேடு ரெயில்வே மேம்பாலம், பசுபதிபாளையம் உள்ளிட்ட கரூர் ரெயில் நிலையத்தை சுற்றியுள்ள பகுதியிலிருந்து சிலர் ரெயில்வே தண்டவாளம் வழியாக ஆபத்தை உணராமல் அதனை கடப்பது அடிக்கடி காண முடிகிறது. இதனால் நொடிப்பொழுதில் ரெயில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் வகையிலான சம்பவங்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது.

சமீபகாலமாக சென்னை உள்ளிட்ட இடங்களில் ரெயில் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தை உணராமல் பயணம் செய்த சிலர் விபத்தில் சிக்கி இறந்ததையொட்டி தமிழகத்தின் பல்வேறு ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே கரூர் ரெயில் நிலையத்தை ஒட்டிய பகுதியில் தண்டவாளத்தில் கடந்து செல்வதால் ஏற்படும் அபாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 

மேலும் இது போன்ற செயலில் ஈடுபடுவர்கள் மீது ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து எச்சரிக்கை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட கரூர் ரெயில் நிலையத்தின் செயல்பாடு உள்ளிட்டவை பற்றி வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை), தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் வருகை தந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி கரூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் தீவரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நிர்வாக காரணங்களால் அந்த ஆய்வு பணிகள் வருகிற 28-ந்தேதிக்கு (செவ்வாய்க் கிழமை) ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித் தனர். 

மேலும் செய்திகள்