நண்பரின் காளையுடன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு சென்ற என்ஜினீயர் பலியானது எப்படி? - உருக்கமான தகவல்

நண்பரின் காளையுடன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு சென்ற என்ஜினீயர் மாடு முட்டி பலியானது குறித்த உருக்கமான தகவல்கள் தெரியவந்தன.

Update: 2020-01-17 23:00 GMT
அலங்காநல்லூர்,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்க காளைகளுக்கு வரிசைப்படி டோக்கன் வழங்கப்பட்டு இருந்தது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் சங்கங்கோட்டையை சேர்ந்த பந்தல் காண்டிராக்டர் வீரபத்திரன் மகன் ஸ்ரீதர் (வயது27). என்ஜினீயரான இவர், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு தன்னுடைய நண்பர் மருதுபாண்டியின் காளையுடன் சென்றிருந்தார்.

அங்கு வாடிவாசலுக்கு உள்புறமாக உள்ள இடத்தில் காளையை வரிசையாக அவிழ்த்துவிட வசதியாக 50-க்கும் மேற்பட்ட காளைகளுடன் மாட்டின் உரிமையாளர்கள் வரிசைப்படி காத்திருந்தனர். ஸ்ரீதரும் மருதுபாண்டியின் காளையுடன் நின்றிருந்தார்.

அப்போது திடீரென ஒரு காளை மிரண்டதில் அங்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் ஸ்ரீதருக்கு பின்னால் நின்றிருந்த காளை ஒன்று அவரை முட்டியது.

இதில் படுகாயம் அடைந்து அவர் அலறியபடி கீழே விழுந்தார். உடனே அங்கு நின்றிருந்தவர்கள் அவரை மீட்டு அலங்காநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஸ்ரீதர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஸ்ரீதர் என்ஜினீயரிங் படிப்பை முடித்தவர் என்றாலும், தற்போது ராமநாதபுரம் சட்டக்கல்லூரியில் படித்து வந்தார். இவருடைய நண்பர் மருதுபாண்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு காளைக்கு பயிற்சி அளித்தபோது, காலில் மாடு முட்டியது. இதையடுத்து அவருக்கு துணையாக காளையுடன் ஸ்ரீதர் சென்றுள்ளார். ஆனால், அவர் பலியான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

மதுரை மாவட்டம் செக்கானூரணி ஊத்துப்பட்டியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (50). கட்டிட தொழிலாளி. இவர் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்க்க வந்திருந்தார். வாடிவாசலில் இருந்து வெளியேறி காளைகள் ஓடிவரும் பகுதியில் ஓரமாக நின்று செல்லப்பாண்டி ஜல்லிக்கட்டு விழாவை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது, ஓடிவந்த காளை ஒன்று திடீரென செல்லப்பாண்டியை நோக்கி சீறி வந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். செல்லப்பாண்டிக்கு, மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர். இந்த சம்பவமும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்