சாத்தான்குளம் அருகே பரபரப்பு: காதல் தம்பதி விஷம் குடித்தனர் - ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

சாத்தான்குளம் அருகே காதல் தம்பதி விஷம் குடித்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Update: 2020-01-18 22:15 GMT
சாத்தான்குளம், 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கீழ கருங்கடல் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் நயினார். இவருடைய மகன் சுடலை (வயது 25). இவர் கோவையில் லோடு ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஏரலைச் சேர்ந்த லட்சுமியை (22) காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.

சுடலை தன்னுடைய குடும்பத்தினருடன் கோவையில் வசித்தார். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு சுடலை தன்னுடைய மனைவி, மகளுடன் சொந்த ஊருக்கு வந்தார்.

இதற்கிடையே சுடலை அடிக்கடி மது குடித்து விட்டு, குடும்பத்தினரிடம் தகராறு செய்து வந்தார். இதனை மனைவி கண்டித்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் சுடலை மதுவில் எலி மருந்து (விஷம்) கலந்து குடித்து விட்டு, தனது வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் தனது சட்டைப்பையில் எலி மருந்து பொட்டலத்தையும் வைத்து இருந்தார்.

வீட்டுக்கு வந்த சுடலை தன்னுடைய மனைவியிடம், மதுவில் விஷம் கலந்து குடித்ததை தெரிவித்து விட்டு மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமி அலறி துடித்தார். பின்னர் அவரும், கணவரின் சட்டைப்பையில் இருந்த எலி மருந்தை எடுத்து தண்ணீரில் கலந்து குடித்து விட்டு, மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, சுடலை, லட்சுமி ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு வந்த காதல் தம்பதி, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்