தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது; பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி

“தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது” என்று பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி கொடுத்து உள்ளார். கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Update: 2020-01-18 22:45 GMT
கோவில்பட்டி, 

தந்தை பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் மேலோட்டமாக பேசி உள்ளார். பின்னர் அவர், பெரியார் குறித்து எதிர்மறையான கருத்தில் பேசவில்லை என்றும், தனது கருத்தின் ஒரு பகுதியை தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என்றும் கூறி உள்ளார். எனவே, அதில் விவாதம் செய்வதற்கு வழி இல்லை.

பயங்கரவாதிகளின் கூடாரமாக தமிழகம் விளங்குகிறது என்று பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார். அவர் மத்திய அரசின் பிரதிநிதியாக இல்லாததால், அவ்வாறு கூறி இருக்கலாம். ஆனால், அவர் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜனதாவில் அங்கம் வகிக்கிறார். பல குறியீடுகளின் அடிப்படையில் தமிழகம் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் முதன்மை மாநிலமாக விளங்குகிறது என்று மத்திய அரசு விருது வழங்கி உள்ளது. எனவே, மத்திய அரசை பொன்.ராதாகிருஷ்ணன் குறை கூறுகிறாரா? அல்லது சீன பிரதமருடன் மாமல்லபுரத்தில் திறந்தவெளியில் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று கூறினார். எனவே, பிரதமரை குறை கூறுகிறாரா?

தமிழக-கேரள மாநில எல்லையான களியக்காவிளை சோதனைச்சாவடியில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை கொலை செய்தவர்கள், கேரள மாநிலத்தில் இருந்துதான் வந்துள்ளனர். எனவேதான் அந்த மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் நேரில் வந்து பார்வையிட்டார். இதுபோன்ற நிகழ்வு எங்கு நடந்தாலும் தவறுதான். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது. அது பாதிக்கும் அளவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

மேலும் செய்திகள்