குமரி மாவட்டத்தில் 1½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்

குமரி மாவட்டத்தில் 1½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்.

Update: 2020-01-19 23:00 GMT
நாகர்கோவில்,

தமிழகம் முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடந்தது. இதே போல குமரி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி, அரசு ஆஸ்பத்திரிகள், நகர்புற மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், நகராட்சி ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் என மொத்தம் 1,236 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.

நாகர்கோவிலில் உள்ள ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நடைபெற்ற முகாமுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

இதில் வசந்தகுமார் எம்.பி., சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தலைவர் அய்யப்பன், மாவட்ட கவுன்சிலர் ஜாண்சிலின் விஜிலா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் போஸ்கோ ராஜன், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி, மருத்துவ கண்காணிப்பாளர் அருள்பிரகாஷ், உறைவிட மருத்துவர் ஆறுமுகவேலன், குழந்தைகள் நல அலுவலர் பகவதிபெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

1½ லட்சம் குழந்தைகள்

பின்னர் தளவாய்சுந்தரம் கூறுகையில், “குமரி மாவட்டத்தில் ஒரே கட்டமாக நடைபெற்ற முகாம் மூலம் 1 லட்சத்து 52 ஆயிரத்து 422 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்த பணிகளில் 4,944 பணியாளர்கள் ஈடுபட்டனர். இது தவிர முகாம் நடைபெற்ற இடங்களுக்கு குளிர்பதன முறையில் சொட்டு மருந்து கொண்டு செல்ல 208 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் மக்கள் கூடும் இடங்களான ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், பூம்புகார் படகுத்துறை மற்றும் காந்தி மண்டபம் ஆகிய இடங்களில் 20 முகாம்களும், உரிய பஸ் வசதி இல்லாத மலைப்பகுதிகளில் நடமாடும் குழுக்கள் 14-ம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தோட்டமலை மற்றும் தச்சமலை பகுதிகளுக்கு படகுகளில் சென்று சொட்டு மருந்து வழங்கப்பட்டது. முகாம் ஆய்வு பணிகளுக்கு 146 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்“ என்றார்.

மேலும் செய்திகள்