தனியார் நிறுவன ஊழியர் கல்லால் தாக்கி கொலை கர்நாடக மாநிலம் மாலூரில் உடல் மீட்பு

ராயக்கோட்டையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது உடல் கர்நாடக மாநிலம் மாலூரில் மீட்கப்பட்டது.

Update: 2020-01-19 23:00 GMT
ராயக்கோட்டை,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் வனத்துறை அலுவலகம் அருகில் உள்ள ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் இறந்து விட்டார். இவரது மகன் சந்தனபாண்டியன் (வயது 27). இவர் ஓசூரில் தங்கி சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு சந்தனபாண்டியன் ஓசூரில் உள்ள தனது அறையில் இருந்தார். அப்போது அவரது நண்பர்கள் சிலர் போனில் அழைத்தனர். இதனால் சந்தனபாண்டியன் மோட்டார்சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

கொலை

இந்த நிலையில் நேற்று காலையில் கர்நாடக மாநிலம் மாலூரில் சாலையோரத்தில் சந்தனபாண்டியன் கொலையுண்டு பிணமாக கிடந்தார். அவரது தலை பகுதியில் காயம் இருந்தது. மேலும் கன்னத்திலும் காயம் இருந்தது. அவர் ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிள் அந்த பகுதியில் உள்ள ஒரு மதுக்கடை அருகில் இருந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து மாலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலையுண்டு கிடந்த சந்தனபாண்டியனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அவரது உடல் சாலையோரத்தில் கிடந்தது. அருகில் பாறாங்கற்கள் இருந்தன. இதனால் மர்ம நபர்கள் அவரை கல்லால் தாக்கி கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அண்ணன் புகார்

இது தொடர்பாக சந்தன பாண்டியனின் அண்ணன் பிருத்விராஜ் மாலூர் போலீசில் புகார் செய்தார். அதில் சின்ன எலசகிரியை சேர்ந்த பெண் ஒருவரும் சந்தனபாண்டியனும் காதலித்து வந்ததாகவும், அதே போல ராயக்கோட்டை பாஞ்சாலி நகரை சேர்ந்த ஒருவருக்கும் சந்தன பாண்டியனுக்கும் இடையே பிரச்சினை இருந்ததாகவும், இதனால் அவர்கள் தரப்பை சேர்ந்தவர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ராயக்கோட்டை தனியார் நிறுவன ஊழியர் மாலூரில் கொலையுண்டு கிடந்த சம்பவம் ராயக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்