நெல்லையில் ரெயில், பஸ் நிலையங்களில் குவிந்த பொதுமக்கள்

பொங்கல் விடுமுறை முடிந்ததை தொடர்ந்து நெல்லையில் ரெயில், பஸ் நிலையங்களில் பொதுமக்கள் குவிந்தனர்.

Update: 2020-01-19 22:00 GMT
நெல்லை, 

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்னை, கோவை, பெங்களூரு, திருப்பூர், புதுச்சேரி உள்ளிட்ட ஊர்களில் தங்கி இருந்து வேலைபார்த்து வருகிறார்கள். இவர்கள் பொங்கல் விழாவை கொண்டாடுவதற்காக அங்கிருந்து சொந்த ஊருக்கு வந்து இருந்தனர். அவர்கள் பொங்கல், மாட்டுப்பொங்கல் முடிந்து தங்களது குழந்தைகளை அழைத்துக் கொண்டு குடும்பத்தோடு நேற்று தங்கள் வேலைபார்க்கின்ற ஊருக்கு புறப்பட்டனர். இதேபோல் தனியார் நிறுவனங்களில் பணிபுரிகிறவர்கள் மற்றும் தொழில் நிறுவனத்தினரும் நேற்று புறப்பட்டனர்.

அவர்கள் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் குவிந்தனர். அந்தியோதயா, கன்னியாகுமரி, நெல்லை, அனந்தபுரி, செந்தூர் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏறி சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். இந்த ரெயில்களில் முன்பதிவு பெட்டிகள் நிரம்பியதுடன், பொது பெட்டிகளில் நெருக்கடியாக நின்று கொண்டே பயணிகள் பயணம் செய்தனர்.

இதேபோல் பெங்களூரு, கோவை எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு பொதுப் பெட்டிகளில் ஏறினர். இதேபோல் நெல்லை வழியாக கேரளா மாநிலத்துக்கு செல்லும் குருவாயூர் உள்ளிட்ட ரெயில்களும் பயணிகள் அவரவர் வேலை செய்யும் இடங்களுக்கு சென்றனர்.

மேலும் நெல்லை புதிய பஸ் நிலையத்திலும் பயணிகள் குவிந்தனர். அங்கிருந்து புறப்பட்ட மதுரை, திருச்சி, சேலம், சென்னை, கோவை, திருப்பூர், பெங்களூரு ஆகிய பஸ்களில் போட்டி போட்டு இடம் பிடித்து பயணம் செய்தனர். பயணிகள் தேவைக்கு ஏற்ப குறிப்பிட்ட ஊர்களுக்கு போக்குவரத்து கழக அதிகாரிகள் சிறப்பு பஸ்களை இயக்கினர்.

மேலும் செய்திகள்