தஞ்சையில், பிரபல கொள்ளையன் கைது 35 பவுன் பறிமுதல்

தஞ்சையில் கைதான பிரபல கொள்ளையனிடம் இருந்து 35 பவுனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2020-01-19 23:00 GMT
கள்ளப்பெரம்பூர்,

தஞ்சையை அடுத்த வல்லம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வீடுகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடந்தன. இந்த சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை பிடிக்க தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்வரன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன், இன்ஸ்பெக்டர் அப்பாசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகரன், ராஜேந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தாமஸ் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

இந்த நிலையில் நேற்று காலை வல்லம் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த ஆரோக்கியமேரி (வயது47) வல்லம் ஆலக்குடி புறவழிச்சாலை அருகே நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி 1 பவுன் சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்றார்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் சங்கிலி பறித்த நபரை உடனடியாக பிடிக்க திட்டமிட்டனர். அதன்படி தஞ்சை- திருச்சி வல்லம் புறவழிச்சாலையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் விதமாக வந்து கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சேட்(32) என்பது தெரியவந்தது. மேலும் அவருக்கு வல்லம் பகுதியில் அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர் குடும்பத்துடன் திருச்சி வாசன் நகரில் வசித்து வந்ததும், மோட்டார் சைக்கிளில் தஞ்சை வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

35 பவுன்

இதையடுத்து அவரை கைது செய்து திருச்சிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்திய போலீசார் அவரிடம் இருந்து 35 பவுன் எடை கொண்ட தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். கொள்ளையடித்த நகைகளை கட்டிகளாக மாற்றி வைத்ததும் விசாரணையில் தெரிந்தது. 2015-2016-ம் ஆண்டில் தஞ்சையில் நடந்த பொக்லின் எந்திரங்கள் திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த சேட், பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்து வீடுகளில் கொள்ளையடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இவர் மீது திருச்சி, தஞ்சை, நாகை, விழுப்புரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் கொள்ளை வழக்குகள் இருப்பதாகவும் போலீசார் கூறினர். தஞ்சையில் பிரபல கொள்ளையன் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்